எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்ய வழிவகுக்கும் மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலித் அமைப்புகள் சார்பில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. பீம் ஆர்மி ஆகஸ்ட் 19 ஆம் டெல்லி ஜந்தர் மந்தரில் போரட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.இந்நிலையில், மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம்சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்கு தடை விதித்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்டோர் முன்ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியும் தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.இந்தத் தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போக செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தை முன்வைத்து, தலித், பழங்குடியின அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரலில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறைகளில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர் நீதிபதிகள்.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தலித் எம்.பி.க்களும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதால், மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்தது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மசோதாவை நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கடுமையான அம்சங்களுடன் கூடிய புதிய சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதா, வரலாற்றுசிறப்பு மிக்கதாகும். இதன் மூலம் அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்துள்ளன என்று கூறினார்.

முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக தலித் அமைப்புகள் சார்பில் உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.2019 இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தலித், பழங்குடியின மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் .

மத்திய அரசு கொண்டுவரும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத் திருத்த மசோதாவில் எந்தவிதமான நீர்த்துப்போகும் அம்சமும் இருக்காது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இந்த மழைக்காலக்கூட்டத்தொடரிலேயே இந்தத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வோம்” என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை எந்தவிதமான முன்விசாரணையும் இன்றி கைது செய்ய முடியும். எந்த அதிகாரிகளிடமும் முன் அனுமதி வாங்க வேண்டியதில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. வழக்கில் தீர்ப்பு வரும்வரை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here