2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு (சி.எஸ்.லட்சுமி) இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி இந்திய அரசினால் மார்ச் 12, 1957ஆம் தொடங்கப்பட்ட அமைப்பு. இது இந்திய மொழிகளில் இலக்கியம், இலக்கியம் சார்ந்த நவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டது.
இதுவரை 6,000திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் நடத்தியுள்ளது. இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்து வருகிறது. மேலும் பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வகை எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக #SahityaAkademi விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 30, 2021
தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும். pic.twitter.com/xgy9vBKreH
அதில் தமிழ் மொழியில் ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார். வாசிப்பு எண்ணிக்கை குறைவு என்பதை விட வாசிப்பு முறை மாறியுள்ளது என்று எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார்.

‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் மு.முருகேஷ். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய ‘குழந்தைகள் சிறுகதைகள்’ என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.