சாமி எல்லாமே ஒண்ணுதான் என்பதே ஆன்மிக ரகசியம். பிரபஞ்சமே உண்மையின் மீதும் நியாயத்தின் மீதும் நிலை கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி எங்கும் வியாபிக்கும்.

 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.

(திருவள்ளுவர்; திருக்குறள், 34)

மனசைச் சுத்தமாக்குவது மட்டுமே ஆகப்பெரிய அறம். மற்றதெல்லாம் வெறும் ஆரவாரம்தான். இதுதான் இந்தத் திருக்குறளின் பொருள். இதுவே அனைத்து வேதங்களின் அடிப்படையாகவும் இருக்கிறது. தூய மனதைப் பெறுவது என்பது பெரும் வரம். எப்போதும் இறைவனை நினைத்து மனமுருகி வாழ்தல் மாபெரும் பாக்கியம். இதுதான் ஞானம். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று விவிலியம் எடுத்துரைக்கிறது. இறைவனைச் சதாசர்வ காலம் நினைப்பதும் பற்றற்று இருத்தலுமே முதன்மையான அறம் என்பதை பகவத் கீதை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைக் கொண்டு நல்லதைச் செய்வாயாக என்று திருக் குர் ஆன் சொல்கிறது. அனைத்து வேதங்களும் “ஜெயமுண்டு; பயமில்லை” என்று நம்மிடம் உறுதியளித்துக் கொண்டிருக்கின்றன. எல்லா மறைகளும் வெளியிடும் செய்தியைத் தெரிந்தால், உயிர்களில் பேதம் பாராட்ட மாட்டோம். இறைச் செய்தியின் ஒருமைப்பாட்டை உணர்வது ஒரு முக்கியமான பயணம்.

ஒரு பத்திரிகையாளராக, ஆளுமைகளை ஆழ்ந்து படிப்பது எனது பழக்கம். “நான் எப்படியொரு நல்ல ஹிந்துவாக இருக்கிறேனோ, அதே அளவுக்கு நல்ல முஸ்லிமாகவும் இருக்கிறேன். அப்படிப் பார்த்தால், நான் நல்லதொரு கிறிஸ்தவராகவும், நல்லதொரு பார்சியாகவும் இருக்கிறேன்” என்று நமது தேசப்பிதா மகாத்மா காந்தி சொல்லியிருந்தார். இதைப் படித்தபோது, எனது கிறிஸ்தவத் தாயார் முதலில் எனக்கு பைபிளைப் படிக்கத் தந்தது நினைவுக்கு வந்தது. ”எல்லாம் ஒரே வானம்; எல்லாம் ஒரே கடல்; எல்லாம் ஒரே பூமி; எல்லாம் ஒரே கடவுள்” என்று தாயாரும் தந்தையும் சொல்லியது ஞாபகத்துக்கு வந்தது. சாமியெல்லாம் ஒண்ணுதான் என்ற சிந்தனையைப் பள்ளிக்கூடக் காலத்திலிருந்தே ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். ”எது நடந்ததோ, அது அதிசயமாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது அதிசயமாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ, அதுவும் அதிசயமாகவே நடக்கும்” என்ற முடிவுக்கு நான் வந்தேன். “நான் உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்” என்ற வேதாகம வசனத்தையே அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுவேன். இதனால் அதிசயங்கள் நிறைந்த பிரபஞ்சத்தைத் தரிசித்து வருகிறேன்.

அது எப்படிச் சாத்தியம்? எவ்வளவு பேர் துயரங்களோடும் கண்ணீரோடும் கர்த்தரைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீங்கள் கேட்பதை நான் செவி தாழ்த்திக் கேட்கிறேன். போதாமையே இங்கு ஊக்கமாக இருக்கிறது. பசியே சக்தியாக மாறுகிறது. பலவீனமே பலமாகிறது. குழந்தைப் பிராயத்தில் பசியைப் பார்த்ததுதான் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக உயர்த்தியது. பாலகனாக இருந்தபோதே பசியோடு உலவியதால்தான் ஏ.ஆர்.ரஹ்மானால் ஆஸ்கர் விருது வாங்குமளவுக்கு உயர முடிந்தது. மரணமே இங்கு வாழ்தல் இனிது என்பதைத் திரும்பத் திரும்பப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. செம்மரக் காடுகள் தீயினால் உயிர்த்தெழுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தைக் கர்த்தர் உண்மையின் மீதும் நியாயத்தின் மீதும் கட்டியெழுப்பியிருக்கிறார். கர்த்தரை வழிபடுவதும் உண்மைக்காகவும் நியாயத்துக்காகவும் எழுந்து நிற்பதும்தான் நமது வேலையாக இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் பரிபூரண விசுவாசம், பரிபூரண சரணாகதி வாழ்வைத் தேர்வு செய்துள்ளேன். நமது இருப்பை, நிலைமையை முழுமனதாக ஏற்றுக்கொள்வதில் பரிபூரண விசுவாசம் தழைக்கிறது. நமது முன்னோக்கிய செயல்பாடுகளால் பரிபூரண சரணாகதி உயிர் பெறுகிறது. சரணாகதி என்பது செயலின்மை அல்ல; செயல்.

உயிர்த்தெழுதலின் மீதான நம்பிக்கையும் பரிபூரண விசுவாசத்தில் பிரிக்கவியலாத அங்கமாக இருக்கிறது. ஏதுமில்லாதபோதும் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று நம்புவதில் உயிர்த்தெழுகிறோம். ”நடக்காது; முடியாது” என்ற சொற்களை விலக்கி வைத்து விட்டு “செய்வோம்; நடத்துவோம்” என்று முழங்குவதில் நாம் உயிர்த்தெழுகிறோம். மருத்துவமனைக்குச் சென்று நோயாளியிடம் நலம் விசாரிப்பதில் நாம் உயிர்த்தெழுகிறோம். சிறைக்குச் சென்று கைதியைச் சந்திப்பதில் நாம் மறுபடியும் உயிர் பெறுகிறோம். பசித்தவருக்கு உணவளிப்பதிலும் ஆடையில்லாதவருக்கு ஆடை அணிவிப்பதிலும் அறிமுகமில்லாதவரிடம் புன்னகைத்து முகமன் சொல்வதிலும் நாம் மீண்டும் உயிர் பெறுகிறோம். இதுதான் சைவத்தின் செய்தி. இளையான்குடி மாற நாயனார் ஏழைகளுக்குப் பசியாற்றித்தான் இறைவனின் திருப்தியைப் பெற்றார். பெருமாள் ஏழையாகவும் (ராமர்), இடையராகவும் (கிருஷ்ணர்), இளிச்சவாயராகவும்தான் (நரசிம்மர்) நம்மிடம் வருவார் என்று சித்தர் இடைக்காடர் விளக்குகிறார். பசியோடு உணவு கேட்க ஆண்டவன் வரும்போது, திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்று இயேசு பிரானும் முகமது நபிகளும் ஆண்டவனின் திருவிளையாடல்களைப் பேசியிருக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது இந்தக் கதைகளிலிருந்து பிறந்த உயரிய தத்துவம்.    

பெரியாழ்வார் நந்தவனத்தில் பூப்பறிக்கவும் பெருமாள்தான் சக்தி தர வேண்டும்; பொறியாளர்கள் மலைகளில் சுரங்கம் அமைக்கவும் பெருமாள்தான் சக்தி தர வேண்டும். ஆற்றலின் ஊற்றுக்கண்ணாக அவன் இருக்கிறான். ஒளியாக இருக்கிறான். உண்மையாக இருக்கிறான். அவன் அறியாமல் ஓர் இலைகூட உதிர்வதில்லை. அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை. அவன் அறியாமல் எந்தக் காயும் கனிவதில்லை. எல்லாவற்றையும் அறிந்தவனாக, எல்லாவற்றையும் பார்க்கிறவனாக இருக்கும் கடவுளின் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்போது நீங்கள் ஏன் விசனப்படுகிறீர்கள்? உங்களிடம் செல்வம் கொழிக்கவில்லையென்றால், புன்னகை செய்யுங்கள். அதுவே பெரும் செல்வம். அது பல இதயங்களை அமைதிப்படுத்தும். உங்கள் மனைவியுடன் புணர்வது பெரும் அறம் என்கிறார் முகமது நபிகள். உழைத்துச் சம்பாதித்துப் பிள்ளைகளுக்கு உணவளிப்பது மாபெரும் நற்செயல் என்கிறார் நபிகள். உண்மையை நிலைநாட்டுவதும் உண்மைக்குச் சாட்சியாவதும் தவிர பெரிய நன்மைகள் எதுவும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் மாபெரும் சீர்திருத்தவாதி அய்யா வைகுண்டர் இதனை ”தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்று அழகாகச் சொன்னார். நன்மையே உண்மை. நல்லறமே உண்மை. ஆண்டவன் நாடாமல் நன்மையைச் செய்ய சக்தி கிடைக்காது. தவம் செய்து அந்த ஆற்றலை ஆண்டவனிடமிருந்து பெற வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தை எந்தக் கோணத்திலிருந்து நீங்கள் பார்த்தாலும் அது ஓர் அழகிய ஓவியமாகத் தெரியும். அதிலிருந்து எந்தச் சட்டகத்தை எடுத்தாலும் குறைவில்லாத அழகைக் கொண்டிருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கூழாங்கல் கூட வீணாக இல்லை. பேச்சும் மூச்சும் ரத்தமும் எல்லாமும் அதிசயம். அப்படி என்றால் நோயை, வலியை, துன்பத்தை எப்படிப் புரிந்துகொள்வது? எப்படி அணுகுவது? அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வதன் மூலம், அதனை ஆரத்தழுவுவதன் மூலம் அதன் உட்பொதியாக இருக்கும் செய்தியை உள்வாங்கிக் கொள்ள முடியும். அவன் அறியாமல் அந்தச் சோதனை உங்களை வந்தடையவில்லை. உங்களது கைகளால் அவை உங்களை வந்தடைந்திருக்கலாம். அல்லது உங்களது நற்செயல்களை விரும்பாதவர்களால் அந்தச் சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது இறைவனது தண்டனையாக, சோதனையாக அது நம்மை வந்தடைந்திருக்கலாம். இதனை ஆழமாக ஆராய்ந்து உணரும்போது அந்தச் சூழலிலிருந்து விடுதலை அடைவதற்கான ஆற்றல் கிடைக்கும். அது செயல் வலிமையால் நிகழலாம். தவ வலிமையால் நிகழலாம்.

நீங்கள் சீக்கியராக இருக்கலாம். ஹிந்துவாக இருக்கலாம். பார்சியாக இருக்கலாம். முஸ்லிமாக இருக்கலாம். கிறிஸ்தவராக இருக்கலாம். கடவுள் உங்களுக்குள்ளேதான் இருக்கிறார். நன்மை எது, தீமை எது என்பதை உணர்த்திக் கொண்டேதான் இருக்கிறார். எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே தவறு இழைக்காதீர்கள், தீங்கு செய்யாதீர்கள் என்பதே வேதங்களின் ஒருமித்த செய்தியாக இருக்கிறது. அநியாயம், அக்கிரமம் பெருத்துவிடும்போது பெருநகரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்துபோன, புதையுண்ட நகரங்களும் பெரும் பஞ்சமும் பட்டினியும் கொள்ளை நோய்களும் நமது மூதாதையர்களின் அராஜகத்தின், அத்துமீறல்களின் அடையாளங்கள். நாகரிகத்தின் பேரழிவுச் சின்னங்கள். செல்வச் செழிப்பின் உச்சத்தில், நாகரிகத்தின் மமதையில் கடலுக்குள் புதைந்துபோன ஊர்களின் கதைகளை வேதங்கள் பேசுகின்றன. கொள்ளை நோய்களால் உண்டான நினைவூட்டல்களை வேதங்கள் உரத்துப் பேசுகின்றன. வேதங்கள் நம்மை இணைப்பதற்கான கருவிகள். அவற்றை வைத்து யார் நம்மைப் பிரிக்க நினைத்தாலும் இயேசு பிரான் சொன்னதையே சொல்லுங்கள், “கர்த்தரே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் அவர்கள் பெரும் பாவங்களைச் செய்கிறார்கள்.” இந்தப் பேரன்பும் உயிர்த்தெழுதலுக்கான சக்தியும்தான் நமக்குத் தேவை. பரம ஏழையின் கண்ணில் பரமனைக் காண்போம். நம்பிக்கைக் கொள்வோம். நல்லது செய்வோம்.

ஹூக்ளியை ஆளும் தமிழச்சி

எம்மி விருதுக்குப் போன சாதனா

நாதமும் தாளமும் நீயானாய்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here