ஹெச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்சனை. இன்று வரை இந்தக் கிருமி 35 மில்லியன் பேரை உயிரிழக்க செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் ஹெச்.ஐ.வி தொடர்புடைய காரணங்களால் உலக அளவில் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏறக்குறைய 37 மில்லியன் பேர் ஹெச்.ஐ.வி தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். 2017ம் ஆண்டு 1.8 மில்லியன் பேர் புதிதாக ஹெச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
aids.002
1980களில் இந்த நோய் முதலில் பரவ தொடங்கியதில் இருந்து, ஹெச்.ஐ.வி எவ்வாறு பரவுகிறது? ஹெச்.ஐ.வியோடு வாழ்வது எப்படி? என்கிற கருத்துக்களில் எல்லாம் வதந்திகளும் கலந்திருந்தன.

உலக எயிட்ஸ் தினமான டிசம்பர் 1ம் தேதி இத்தகைய தவறான தகவல்களில் பொதுவானவற்றை வெளிப்படுத்துகிறோம்.

கட்டுக்கதை 1: ஹெச்.ஐ.வி தொற்றுடையவரோடு இருந்தால் எனக்கும் ஹெச்.ஐ.வி வரலாம்

பல்வேறு விதமான விழிப்புணர்வு பரப்புரைகள் நடைபெற்றாலும், 2016ம் ஆண்டு பிரிட்டனிலுள்ள 20 சதவீத மக்கள், தொடுவதால்கூட ஹெச்.ஐ.வி பரவலாம் என்று நம்புகின்றனர்.

ஆனால், தொடுதல், கண்ணீர், வேர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றால் ஹெச்.ஐ.வி பரவுவதில்லை.

ஹெச்.ஐ.வி கீழ்கண்டவற்றால் பரவாது:

*ஒரே காற்றை சுவாசித்தல்
*கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைக்குலுக்குதல்
*சாப்பிடும் தட்டுகளை பகிர்ந்து கொள்ளுதல்
*அருவிகளில் ஒன்றாக குளித்தல்
*தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல்
*ஜிம் உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்துதல்
*கழிவறை இருக்கை, கதவின் குமிழ் அல்லது கைப்பிடியை தொடுதல்
aids.003
ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறி திரவம் மற்றும் தாய் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம்தான் ஹெச்.ஐ.வி பிறருக்கு பரவுகிறது.

கட்டுக்கதை 2: மரபுவழி மருந்துகள் ஹெச்.ஐ.வி தொற்றை குணப்படுத்தலாம்

இது உண்மை இல்லை. மாற்று மருத்துவம், உடலுறவு கொண்ட பின்னர் குளிப்பது அல்லது கன்னிப்பெண்ணோடு உடலுறவு கொள்வதால் ஹெச்.ஐ.வி தொற்றுவதை தடுத்துவிட முடியாது.

ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகளிலும், இந்தியா மற்றும் தாய்லாந்தின் பகுதிகளிலும் நிலவிய கன்னிப்பெண்ணோடு உறலுறவு கொண்டால் குணமாகிவிடலாம் என்கிற தவறான நம்பிக்கை மிகவும் ஆபத்தானது.

இதனால் பல இளம் பெண்களும், சிலவேளைகளில் குழந்தைகள் கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் மூலம் அவர்களும் ஹெச்.ஐ.வி தொற்றுகின்ற ஆபத்திற்கு உள்ளாகின்றனர்.

கட்டுக்கதை 3: கொசுக்கள் ஹெச்.ஐ.வியை பரப்பலாம்

ரத்தத்தின் மூலம் ஹெச்.ஐ.வி வைரஸ் பரவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்தாலும் ரத்தம் உறிஞ்சும் பூச்சிக்களால் ஹெச்.ஐ.வி தொற்றாது.

இரண்டு காரணங்கள்:

பூச்சிகள் கடிக்கின்றபோது மனித அல்லது விலங்கின் உடலுக்குள் ரத்தத்தை செலுத்துவதில்லை.
பூச்சிகளிடத்தில் ஹெச்.ஐ.வி வைரஸ் சிறிது நேரமே உயிருடன் இருக்கும்.
எனவே, ஏராளமான கொசுக்கள் அதிகம் இருக்கின்ற, ஹெச்.ஐ.வி தொற்று மிகவும் பரவலாகியிருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தாலும் ஹெச்.ஐ.வி தொற்றுவதற்கும், அந்த பகுதியின் சூழ்நிலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கட்டுக்கதை 4: வாய்வழி புணர்தலால் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படாது

வேறுவழியிலான பாலுறவை விட வாய்வழி புணர்தல் ஆபத்து குறைந்தது என்பது உண்மை. இதனால் நோய் பரவும் விகிதம் மிகவும் குறைவு. 10 ஆயிரத்தில் 4க்கும் குறைவானோருக்கு இந்த முறையில் நோய் பரவலாம்.

ஆனால், ஹெச்.ஐ.வி தொற்றுடைய ஆண் அல்லது பெண்ணுடன் வாய்வழி புணர்ச்சி கொள்வதன் மூலம் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படலாம். எனவேதான் வாய்வழி புணர்தலின்போதும் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கட்டுக்கதை 5: கருத்தடை சாதனம் அணிந்தால் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படாது

பாலுறவின்போது கருத்தடை சாதனங்கள் உடைந்தால், நழுவினால் அல்லது கசிந்தால் ஹெச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுப்பதில் தோல்வியடையலாம்.

எனவேதான் மக்கள் ரப்பர் உறைகளை அணிய செய்வதல்ல எயிட்ஸ் விழிப்புணர்வு அளிப்பவர்களின் வெற்றி. ஆனால், ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதை பரிசோதனை செய்து அறிந்து, இருப்பதாக தெரிந்து கொண்டால் உடனடியாக சிகிச்சை பெறச்செய்வதுதான் விழிப்புணர்வு அளிப்பவர்களின் வெற்றியாக அமையும்.

ஹெச்.ஐ.வி தொற்று இருக்கின்ற 4 பேரில் ஒருவருக்கு அத்தகைய தொற்று தனக்கு இருப்பதே தெரிவதில்லை. இவ்வாறு இருக்கின்ற 9.4 மில்லியன் பேர்தான் ஹெச்.ஐ.வியை பரவ செய்கின்ற பெரிய ஆபத்தாக உள்ளனர்.

கட்டுக்கதை 6: அறிகுறிகள் இல்லை என்றால் ஹெச்.ஐ.வி தொற்றவில்லை

ஹெச்.ஐ.வி தொற்றோடு ஒருவர் 10 அல்லது 15 ஆண்டுகள் உயிர் வாழலாம். இந்நிலையில் அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் போகலாம்.

அவர்கள் காய்ச்சல், தலைவலி, வீக்கம் அல்லது தொண்டை வலி போன்ற சுகவீனங்கள் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட உடனே ஏற்படலாம்.

இந்த தொற்று படிப்படியாக நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்துகின்றபோது, நிணநீர் முனைகளில் வீக்கம், எடை இழப்பு, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் இருமல் போன்ற பிற அறிகுறிகள் ஏற்படலாம்.

சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பிற நோய்களோடு, காசநோய், கிரிப்டோகோகல் மூளைச்சவ்வு வீக்கம், கடுமையான பாக்டீரியா தொற்று மற்றும் நிணநீர் திசுக்கட்டி, மென்தசை கூர் அணுப்புற்று போன்ற புற்றுநோய்களும் வரலாம்.

கட்டுக்கதை 7: ஹெச்.ஐ.வி தொற்றுடையவர் இளமையில் இறந்து விடுவார்

ஹெச்.ஐ.வி இருப்பதை அறிந்து, அதற்கேற்ப ஒழுங்காக சிகிச்சை எடுத்துக்கொள்வோர் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது அதிகரித்து வருகிறது.

ஹெச்.ஐ.வி தொற்றுடைய 47 சதவீதம் பேரிடம் வைரஸ் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது என்று ஐநா உதவி நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது ரத்தத்திலுள்ள வைரஸ் ரத்த பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் குறைந்து விடுவதை இது குறிக்கிறது.

இவ்வாறு வைரஸை ஒடுக்கிவிட்டோர், ஹெச்.ஐ.வி தொற்று இல்லாதவரோடு பாலியல் உறவு கொண்டாலும் அதனை பரப்ப முடியாது.

இருப்பினும், இவர்கள் எடுத்து வருகின்ற சிகிச்சையை நிறுத்திவிட்டால், ஹெச்.ஐ.வி தொற்று நிலை மீண்டும் முந்தைய நிலைக்கு வந்து, ரத்த பரிசோதனையில் ஹெச்.ஐ.வி இருப்பது கண்டறியப்படும்.

2017ம் ஆண்டு ஹெச்.ஐ.வி தொற்றுடன் வாழும் 21.7 மில்லியன் பேர் ஹெச்.ஐ.வி. வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

2010ம் ஆண்டு இருந்த 8 மில்லியன் பேரை விட இது மிகவும் அதிகமாகும். ஹெச்.ஐ.வி தொற்றுடைய சுமார் 78 சதவீதம் பேர் தங்களின் நிலை பற்றி அறிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கதை 8: ஹெச்.ஐ.வி தொற்றிய தாய்மார் குழந்தைகளுக்கு அதைபரப்புவதை தவிர்க்க முடியாது
aids.004
இவ்வாறு நடைபெறும் என்று சொல்வதற்கில்லை. சிகிச்சை எடுத்து ஹெச்.ஐ.வி வைரஸை ஒடுக்கிவிட்டவர்களாக கருதப்படும் பெண்கள் இந்த வைரஸ் தொற்றை பரப்பாமல் குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்.

Courtesy : BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here