எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களைப் பிடித்த சிபிஎஸ்இ மாணவர்கள் (முழு விவரம்)

0
487

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தைப் பிடித்து தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்த சென்னை கே.கீர்த்தனா என்ற மாணவி மருத்துவத் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களே.

47,000 விண்ணப்பங்கள்: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அரசு இடங்களுக்கு 28,067, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19,280 என மொத்தம் 47,347 பேர் விண்ணப்பித்தனர். அரசு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 21,204 பேர் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள், 6.863 பேர் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்கள். விண்ணப்பதாரர்களில் 10,473 பேர் ஆண்கள், 17,593 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர். அரசு இடங்களுக்கு 25,417, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 18,915 என மொத்தம் 44,332 விண்ணப்பங்கள் தகுதியானவை.

எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கென 2,447, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 65 என மொத்தம் 2,639 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இது தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 689 இடங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு சமர்ப்பிக்க இடங்கள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 3,328 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

பிடிஎஸ் இடங்கள்: பல் மருத்துவத்தைப் பொருத்தவரை சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

தரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்டனர். அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குத் தனித்தனியே இரண்டு தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

முதல் 10 இடங்கள்: நீட் தேர்வில் 676 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 12-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்த சென்னை மாணவி கே.கீர்த்தனா தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். தருமபுரி ஆர்.ராஜ் செந்தூர் அபிஷேக், சென்னை ஆர்.பிரவீண், சென்னை முகமது ஷோயுப் ஹாசன், பொன்னேரி டி.வி.ராகவேந்திரன், திருப்பூர் கணபதிபாளையம் எஸ்.அரவிந்த், திருச்சி என்.ஈ. ஹரி நரேந்திரன், திருநெல்வேலி சி.ஆர்.ஆர்த்தி சக்தி பாலா, சென்னை யெந்தூரி ருத்விக், ஈரோடு கவுந்தப்பாடி யு.எம்.ரவி பாரதி ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 8 பேர் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், 2 பேர் இசிஎஸ்இ பாடத்திட்டத்திலும் படித்தவர்கள். மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் ஒருவர் கூட இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வியாண்டைப் போன்றே 2,447 இடங்கள் உள்ளன. இவற்றில் இடங்கள் அதிகரிக்கப்படவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. அதனால் அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது.
அரசுப் பள்ளிகளில் படித்த 1,337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அவர்களில் எத்தனை பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது இனிதான் தெரியவரும்.

கடுமையான விதிமுறைகள்: போலி இருப்பிடச் சான்றிதழ், இரட்டை இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க இந்த ஆண்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வேறு மாநிலத்துக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை பல் வேறு மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கோ, வேறு மாநிலத்தில் விண்ணப்பித்தவர்கள் தமிழக இடங்களுக்கோ விண்ணப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

இடங்களைச் சமர்ப்பித்துள்ள வேலூர் சிஎம்சி: வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) முதன்முறையாக தமிழக அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மொத்தம் 100 இடங்களில் 84 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களையும் மருத்துவக் கல்வி இயக்ககமே நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலந்தாய்வு விவரம்: தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து முதல் கட்ட கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது. முதல்நாள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். சிறப்புப் பிரிவில் விளையாட்டுப் பிரிவு இடங்கள் 3-இலிருந்து 7-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுப் பிரிவினருக்கு 7 எம்.பி.பி.எஸ் மற்றும் 1 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 29 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடங்களும் 5-இலிருந்து 10-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 1 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 2-ஆம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 10-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். அகில இந்திய கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, அந்த இடங்களுக்கும் சேர்த்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

9,879 பழைய மாணவர்கள்!
மருத்துவப் படிப்புகளில் அரசு இடங்களுக்கு கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய 9,879 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோன்று நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 8,319 பேர் பழைய மாணவர்கள்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒரு மாணவர் 3 முறை எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வெழுதியவர்கள்கூட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற வாய்ப்புள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பழைய மாணவர்களாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2016 – 2017) முதன்முறையாக நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோதும் 5,636 பழைய மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here