எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு: ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா?

0
148

மிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் MGR: A Life என்ற புத்தகம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருந்தது.

திராவிட இயக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆர். கண்ணன் இந்த புத்தகத்தை எழுதி இருந்தார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் வாழ்வைச் சொல்லும் Anna: The Life and Times of C.N. Annadurai என்ற நூலையும் எழுதியவர்.

பென்குயின் இந்தியா வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் சில பகுதிகளை பிரத்யேகமாக அளிக்கிறது பிபிசி தமிழ்.

மீண்டும் சினிமாவை நோக்கி

முதல்வர் பதவி எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு சௌகர்யமாக இல்லை; ஆகவே திரும்பவும் சினிமாவில் நடிக்க விரும்பினார் அவர் என்று தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் மோகன்தாஸ் (எம்.ஜி.ஆர். ஆட்சியில் காவல்துறை தலைவராக இருந்தவர்).

1978 பிப்ரவரி 12ஆம் தேதி மதுரையில் பேசிய எம்.ஜி.ஆர். தன்னுடைய சம்பளத்திலிருந்து வருமான வரிபாக்கியை செலுத்த முடியாததால், இன்னும் இரண்டு மாதங்களில் தான் மீண்டும் நடிக்கச் செல்லப்போவதாக கூறினார்.

இந்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர். ஒரு நிலையில் இல்லாமல், மாற்றி மாற்றிப் பேசியது, பதவி, அரசியல், அரசு, நிர்வாகம் ஆகியவை தரும் அழுத்தத்தால் அவருக்கு இருந்த அசௌகர்யத்தையும் விரக்தியையும் காட்டியது.

ஆனால், எம்.ஜி.ஆர் ஒரு தயக்கம் மிகுந்த அரசியல்வாதி இல்லை என்கிறார் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன்.

ஏழைகளுக்குப் பெரிதாக ஏதும் செய்ய முடியாததில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவும் அவர் சந்திக்க வேண்டியிருந்த கடும் எதிர்ப்புகளின் காரணமாகவுமே எம்.ஜி.ஆர். இப்படி அறிவித்துவந்ததாகக் கூறுகிறார் அவர்.

… எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் அவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாசன், ‘காகிதங்களை கையெழுத்திட்டு தள்ளிவிடும்’ ஒரு எளிமையான பணியில் எம்.ஜி.ஆர். அமர்ந்துவிட்டதாகக் கூறினார்.

இதற்குப் பிறகு ஏற்புரை வழங்கிய எம்.ஜி.ஆர்., முக்தா ஸ்ரீநிவாசன் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

எம்.ஜி.ஆர்
முதல்வரானாலும், சினிமாவில் நடிக்க ஆசை

பதினைந்து நாட்களுக்கு முதல்வராகவும் பதினைந்து நாட்களுக்கு நடிக்கப்போவதாகவும் அப்போது அறிவித்தார்.

இதைப் பற்றிக் கேள்விப்பட்ட பிரதமர் மொரார்ஜி தேசாய், அப்படிச் செய்தால் அது முதல்வர் பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என அறிவுறுத்தினார்.

இருந்தபோதும் ராணி வார இதழுக்கு அதே ஆண்டில் கொடுத்த பேட்டியில், தான் நடிப்பைவிட்டு விலகப்போவதில்லை என்று கூறினார் எம்.ஜி.ஆர். இரு பொறுப்புகளையும் தன்னால் சமாளிக்க முடியும் என்றார் அவர்.

….. ஏப்ரல் மாதத்திலிருந்து தன்னுடைய சொந்தப் படமான `இமயத்தின் உச்சியில்` படத்தில் நடிக்கப்போவதாக 1979 ஜனவரி 31ஆம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

அந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகுமென்றும் கூறப்பட்டது.

சட்டம் அதனை அனுமதிக்காவிட்டால், தன் பொறுப்புகளை ‘நண்பர்களிடம்’ விட்டுவிட்டு நடிப்பைத் தொடரப்போவதாகவும் எம்.ஜி.ஆர் கூறினார்.

ஆனால் அதற்குப் பிறகு, அண்ணாவின் நினைவு நாளில் பேசிய எம்.ஜி.ஆர்., நடிப்பது தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றதோடு, ‘நான் உயிரோடு இருக்கும்வரை, எந்த விதத்திலும் என் பொறுப்புகளை புறந்தள்ள மாட்டேன்’ என்று கூறினார்.

… ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழில் `உன்னை விடமாட்டேன்` என்ற படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கப்போவதாக முதல் பக்கத்தில் செய்தி வெளியானது.

இதற்கு சில நாட்களுக்கு முன்பாக வாலிக்கு போன் செய்த எம்.ஜி.ஆர். அன்றைய நாளிதழ்களைப் பார்க்கச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாது என்றால், அவர் படங்களில் நடிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லையென பிரதமர் கூறியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

வாலி மிக வேகமாக ஒரு திரைக்கதையை தயார் செய்தார்.

கே. ஷங்கர் படத்தை இயக்குவதென்று முடிவானது. குறிப்பிட்ட நாளில் மனோகரன், பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பை துவக்கிவைத்தார்.

அதே நேரத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த விவசாயிகள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

திரைப்படத் துவக்க விழாவுக்கு ஆளுனர் வருவதாக இருந்த நிலையில், நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாமென்பதால், அவரை வரவேண்டாமெனக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். நாட்டிற்கு நலம்பயக்கும் திரைப்படங்களில் நடிக்கப்போவதாகக் கூறினார் எம்.ஜி.ஆர்.

இதற்கு சில காலத்திற்குப் பிறகு, இந்தியா டுடேவில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

தமிழக தொழிற்துறை வளர்ச்சி தொடர்பான மிகப் பெரிய நிகழ்வில் எம்.ஜி.ஆரைத் தலைமை ஏற்கும்படி கேட்பதற்காக சில மூத்த தொழிலதிபர்கள் அவரது அலுவலகத்திற்குச் சென்றனர்.

ஆனால், முதல்வர் மிகுந்த பணிநெருக்கடியில் இருப்பதால் அவரைப் பார்க்க முடியாது என்று கூறப்பட்டது.

வந்திருந்தவர்கள் மீண்டும் வலியுறுத்தவே, அவர் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆர். அங்கு இல்லை.

முடிவில் உன்னைவிட மாட்டேன் படத்தின் படப்பிடிப்பில் அவர் இருந்தது தெரியவந்தது.

அலுவலக நேரத்திற்குப் பிறகுதான், நடிக்கப்போவதாக எம்.ஜி.ஆர். கூறிவந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பில் காலை முதல் மாலைவரை அவர் நடித்துவந்தார்.

‘எம்.ஜி.ஆரின் தலைமையின் கீழ் அரசு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது’ என்று எழுதியது இந்தியா டுடே.

திமுக – அதிமுக இணைப்புப் பேச்சு வார்த்தைகள்

எம்ஜிஆர், கருணாநிதி
இரு துருவங்களான கழகங்கள்

1979ஆம் வருடத்தின் இலையுதிர் காலம். ஒரிசாவைச் சேர்ந்த மத்திய அமைச்சரான பிஜு பட்நாயக், ஒரு வலிமையான எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்க விரும்பினார்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் இரு கழகங்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார் அவர். வீரமணி மூலம் அவ்வப்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது அவருக்குத் தெரியாது.

கலைஞரை எம்.ஜி.ஆர். சந்திக்க வேண்டுமென பத்திரிகையாளர் சோலை அறிவுறுத்திவந்தார். கலைஞரிடம் வீரமணி இதனை வலியுறுத்திவந்தார்.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை கலைஞரை தொலைபேசியில் அழைத்த, பட்நாயக் சென்னை வந்து அவரை சந்திக்கலாமா என்று கேட்டார்.

…. செப்டம்பர் 12ஆம் தேதி சென்னை வந்த பட்நாயக், கலைஞரைச் சந்தித்தார். கலைஞர் ஆறு நிபந்தனைகளை முன்வைத்தார்.

1. இணைப்பிற்குப் பிறகு ஒருங்கிணந்த கட்சி தி.மு.க. என்றே அழைக்கப்படும்.

2. கட்சியின் கொடி அ.தி.மு.கவின் கொடியாக இருக்கலாம்.

3. எம்.ஜி.ஆர். முதல்வராகத் தொடர்வார்.

4. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்க அவசியமில்லை.

5. ஒருங்கிணைந்த கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் யார் என்பது இணைப்பிற்குப் பிறகு தகுந்த நேரத்தில் முடிவுசெய்யப்படும்.

6.முக்கியமாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற ஆணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற வேண்டும்.

இந்த நிபந்தனைகளைக் கேட்ட பட்நாயக், எம்.ஜி.ஆர். இதற்கு நிச்சயம் ஒப்புக்கொள்வார் என்று நம்பினார்.

மோதல் அரசியலால் களைப்படைந்த எம்.ஜி.ஆர்

எம்ஜிஆர், கருணாநிதி
மோதிய தலைவர்கள்

எம்.ஜி.ஆரும் இணைப்பை விரும்பினார் அல்லது அப்படி ஒரு தோற்றம் இருந்தது.

மோதல் அரசியல் தமிழ்நாட்டை முன்னெடுத்துச்செல்லவில்லை என்பதோடு, எம்.ஜி.ஆருக்கு மிகவும் களைப்பூட்டியது.

செப்டம்பர் 12ஆம் தேதி காலையில் மோகன்தாஸுடன் (காவல்துறை தலைவர்) இணைப்பு குறித்து பேசினார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் காலையில் மாநில விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர். பட்நாயக் அருகில் இருந்த கலைஞரை ‘ஆண்டவரே’ என்று பிரியத்துடன் அழைத்தார்.

கலைஞருடன் அன்பழகன் இருந்தார். எம்.ஜி.ஆர். நெடுஞ்செழியனையும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரனையும் அழைத்துச் சென்றிருந்தார்.

பிறகு இரு தலைவர்களும் 40 நிமிடங்கள் தனிமையில் பேசினர். பட்நாயக் சொன்ன நிபந்தனைகள் எல்லாம் உண்மைதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

இந்த ஆறு நிபந்தனைகளுக்கும் பின்னாலிருந்த காரணங்களை விளக்கினார் கலைஞர். எம்.ஜி.ஆர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

மேலும் ஒருபடி முன்னே சென்று, இரு கட்சிகளின் செயற்குழுவும் பொதுக்குழுவும் ஒரு குறிப்பிட்ட நாளில்கூடி இணைப்பு குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என வாக்குறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.

கழகங்களின் இணைப்பைக் `கெடுத்தது` யார் ?

பேசி முடித்துவிட்டு வெளியில் வந்த இரு தலைவர்களும் பட்நாயக்கையும் ஊடகத்தினரையும் சந்தித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கினர்.

அதே நாளில் கருப்பையா மூப்பனாரை எம்.ஜி.ஆர். சந்தித்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக கலைஞர் குறிப்பிடுகிறார்.

கலைஞரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், தன்னுடைய ராமாவரம் இல்லத்தில் வைத்து கருப்பையா மூப்பனாரைச் சந்தித்துப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர்.

அன்று மாலையில் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்த பி. ராமச்சந்திரனுக்கு விருந்தளித்தார் எம்.ஜி.ஆர்.

அடுத்த நாள் செப்டம்பர் 14ஆம் தேதி. அண்ணாவின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம்.

வேலூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவின் கொடி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயரத்தில் பறக்கும் என்று குறிப்பிட்டார்.

தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்பது இருக்காது என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவரது அமைச்சர்கள் தி.மு.க. குறித்தும் கலைஞரைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

இப்படியாக, கழகங்களின் இணைப்பு என்ற சிந்தனையை தீர்த்துக்கட்டினார் எம்.ஜி.ஆர்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பொது நிகழ்வில் பேசிய கலைஞர், இணைப்பு நடக்காமல் போனதற்கு வேறு ஒரு ராமச்சந்திரன் மீது குற்றம்சாட்டினார்.

“இதனைக் கெடுத்தது யார் என்பது எனக்குத் தெரியும். நான் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரைச் சொல்லாவிட்டால் வரலாறு முழுமையடையாது. மாநில விருந்தினர் மாளிகையில் இணைப்புப் பேச்சுவார்த்தைகள் முடிந்து, எம்.ஜி.ஆர். வேலூருக்குப் போனபோது உடன் பயணம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரன்தான் அவர்” என்றார் கலைஞர்.

துணை முதல்வராக விரும்பிய ஜெயலலிதா

ராஜிவ் காந்தி ஜெயலலிதா
துணை முதல்வராக விரும்பி ராஜிவுக்கு அழுத்தம் தந்த ஜெயலலிதா

தன்னை அமைச்சராக்க வேண்டுமென ஜெயலலிதா எதிர்பார்த்ததாக மோகன்தாஸ் குறிப்பிடுகிறார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அதனைக் கண்டுகொள்ளவில்லை.

ஜெயலலிதாவின் விசுவாசத்தையும் பிரியத்தையும் சோதிக்க எம்.ஜி.ஆர். விரும்பியதாக கருதுகிறார் மோகன்தாஸ்.

ஜெயலலிதா உண்மையில் துணை முதலமைச்சராக விரும்பினார்.

ஆனால், தன்னை இப்படி எம்.ஜி.ஆர். சோதிப்பதில் கோபமடைந்தார் அவர்.

“அவர் திரும்ப முதல்வரானதற்கு நான்தான் காரணம். கலைஞருக்கு எதிராகத் தீவிர பிரச்சாரம் செய்தேன். அவர் எல்லோரையும் பார்க்கிறார். என்னை ஞாபகமில்லையா அவருக்கு? என் பணிகளைப் பற்றி நீங்கள் சொல்ல முடியாதா?” என்று எஸ். திருநாவுக்கரசரிடம் கேட்டார் ஜெயலலிதா.

….. பத்து நாட்களுக்குப் பிறகு, துணை முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவிடம் தீவிரமடைந்தது.

பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரை வரவேற்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

தன்னை வரவேற்க ஆளுனர் வந்திருக்கும்போது உடல்நலம் சரியில்லாத நிலையில் எம்.ஜி.ஆர். வந்தது ஏன் என ராஜீவ்காந்தி திரும்பத் திரும்பக் கேட்டார்.

தான் வருவதுதான் சரியானதாக இருக்கும் என்று மட்டும் கூறிய எம்.ஜி.ஆர்., ராஜ்பவனுக்கு பிரதமருடனேயே சென்று, அவருடன் பேசினார்.

அங்கிருந்து திரும்பும்போது, ராஜ்பவனில் ஜெயலலிதா பிரதமரை சந்தித்துப் பேசுவார் என்பது தனக்குத் தெரியும் என காரில் தன் உடன் வந்த ராஜாராமிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

பிரதமரை சந்தித்த ஜெயலலிதா தன்னை துணை முதல்வராக நியமிக்க வேண்டுமென எம்.ஜி.ஆரிடம் சொல்லும்படி கோரினார்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு முட்டுக்கட்டைபோட்டுவிட்ட நிலையில், தன் பிரபல்யத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமையடைந்திருப்பதாகவும் ‘பொது வாழ்விலிருந்தும் அரசியல் களத்திலிருந்தும் என்னை அகற்ற’ என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வதாகவும் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா.

‘அவரைத் தவிர்த்துவிட்டால் எல்லோரும் பூஜ்யங்கள் என்பதால், யாரும் அவரை எதிர்க்க மாட்டார்கள்’ என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார் ஜெயலலிதா.

இதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஜனவரி 21ல் பொதுத் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், அதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாக மக்கள் குரல் நாளிதழும் மாலை முரசு நாளிதழும் இந்தக் கடிதத்தை தங்கள் முகப்புப் பக்கத்தில் வெளியிட்டன.

கலைஞர்தான் போலியாக அந்தக் கடிதங்களை உருவாக்கியதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here