தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. இன்றைய தீர்ப்பில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அணுகுண்டாக வெடிக்குமா..?, புஸ்வாணமாக போகுமா..? என்ற இமாலய எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளை அடுத்து ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி உருவான நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணி உருவானது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

18

இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களைத் தர வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரியிருந்தோம். அந்த ஆவணங்களைக் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்தோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆவணங்களை பேரவைத் தலைவர் அளிக்கவில்லை.

இது போன்ற சூழ்நிலைகளில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதல்ல. பேரவைத் தலைவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, எங்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் அமர்வு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

தீர்ப்பு எப்படி இருக்கும்?: ஏற்கனவே, பேரவையில் முதல்வர் எடப்பாடி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த இன்றைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நிராகரித்துள்ள நிலையில், இன்றைய தீர்ப்பில் 18 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும். சபாநாயகரின் முடிவு சரி என்று அளிக்கப்படலாம் அல்லது தகுதி நீக்கம் செல்லாது. சபாநாயகர் முடிவு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினால் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

அதாவது, தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு அமைந்தால் 18 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் நடக்கலாம். தேர்தல் முடிவின் அடிப்படையில் ஆட்சி முடிவாகும்.

தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு அமைந்தால் அரசு பெரும்பான்மையை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புக்கு முயலாம்.

அதே நேரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தால், எடப்பாடி ஆட்சி தப்பலாம். மறு அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை ஆளும் எடப்பாடி ஆட்சிக்கு கவலையில்லை.

மேலும் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படலாம் அல்லது அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கப்படலாம். அல்லது சபாநாயகர் தனது உத்தரவை மறு பரிசீலனை செய்யலாம் என கூறுவதற்கும் அதிகமான வாய்ப்புகள் உள்ளன

எது எப்படி இருந்தாலும், பாதிக்கப்படுவோர், உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடும். அங்கு தான், இந்த விவகாரத்திற்கு இறுதி முடிவு கிடைக்கும் என்பது மூத்த அரசியல்வாதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் பெரும்பான்மையான கருத்தாக உள்ளது.

சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரம்:
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை: 234
திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை: 98
தினகரன் மற்றும் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை: 22 (எஸ்.ஆர்.பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி)
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வென்ற உறுப்பினர்கள்: 3 (கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி)
பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள்: 118
ஆளும் அதிமுக வசம் உள்ள உறுப்பினர்கள்: 110
சபாநாயகர்: 1
ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் ஆளும் எடப்பாடி அரசிடம் இல்லை. எடப்பாடி அரசுக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்றால் எடப்பாடி அரசு கவிழும். மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல் நடைபெறலாம்.

தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு அமைந்தால்…
பேரவையின் மொத்த பலம்: 216
ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு: 109
ஆளும் அதிமுக வசம் உள்ள உறுப்பினர்கள் ஆதரவு: 110
சபாநாயகர்: 1
திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை: 98
தினகரன் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பிரபு, கலைச்செல்வன், ரத்தினபாபதி எண்ணிக்கை: 1+3
அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட தோழமை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 3

எடப்பாடி அரசுக்கு தேவையான உறுப்பினர்கள் பலம் உள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மறு தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகே அடுத்தகட்ட நிகழ்வு என்ன என்பது தெரிய வரும்.

இன்றைய தீர்ப்பு ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அணுகுண்டாக வெடிக்குமா..?, புஸ்வாணமாக போகுமா..? என்பதை இன்று 1 மணி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

courtesy : Dinamani

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்