Sadhana Subramaniam is the first Indian documentary filmmaker to be nominated to Emmy Awards. எம்மி விருது போட்டியில் இடம்பெற்ற முதல் இந்திய ஆவணப் பட இயக்குனர் சாதனா சுப்பிரமணியம். Photo: Kathervel/IPPODHU படம்: கதிர்வேல்/இப்போது

தன் கணவனைப் படுகொலை செய்த தந்தைக்குத் தூக்குத் தண்டனை என்ற செய்தியை டிவியில் பார்த்து மகிழ்ச்சியடைகிறார் கவுசல்யா. பேருந்தில் பயணம் செய்தவாறே தான் சங்கரைக் காதலித்த கதையைச் சொல்கிறார் கவுசல்யா. இன்னொரு காட்சியில், கவுசல்யாவின் அம்மாவும் சகோதரனும் சங்கரைப் படுகொலை செய்ததை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள். ”இந்தியாவின் தடை செய்யப்பட்ட காதல்” (India’s Forbidden Love) என்ற ஆவணப்படத்தில் வரும் காட்சிகள் இவை. காதல் திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவும் சங்கரும் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று உடுமலையின் கடைவீதியில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா அதிசயமாக உயிர் பிழைத்தார். இதைப் பற்றி 25 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தை எடுத்தவர் சாதனா சுப்பிரமணியம் என்ற தமிழ்ப் பெண். இந்தப் படம் 2019 ஆம் ஆண்டுக்கான உலகப் புகழ் பெற்ற எம்மி விருதுக்கான போட்டியில் இடம்பெற்றது. இதன் மூலம் எம்மி விருது போட்டியில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குனர் என்ற பெருமை சாதனா சுப்பிரமணியத்துக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியச் சமூகத்தின் சாதி அடுக்குகளும் அதற்குள் இருக்கும் வன்முறையும் மீண்டும் ஒரு முறை உலக மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Sadhana Subramaniam with the nominee medal at the Emmy Awards function in New York.

நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம் ஆகியவை பிரபலமான பிறகு கடந்த மூன்று வருடங்களாக ஆவணப் படங்களில் கதைசொல்லல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஓர் எதிர்பார்ப்பைப் பார்ப்பவர்களிடம் உண்டாக்குவது கதைசொல்லலின் மிக முக்கியமான அம்சம். அந்த வகையில் இந்தப் படம் முழு நீளத்துக்கும் கதைசொல்லலில் பார்வையாளர்களின் கவனத்தைத் தக்க வைக்கிறது. 16 வயதிலேயே லண்டனில் படிக்கப்போன பிறகு இந்தப் படம் செய்வதற்காகத்தான் நீண்ட நாட்கள் (சுமார் ஒன்பது மாதங்கள்) இந்தியாவில் தங்கினார் சாதனா. ”நானும் இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க என்கிற மனநிலையில்தான் இந்தப் படம் செய்ய வந்தேன். ஆனால் களத்தில் மக்களைச் சந்திக்கும்போது சாதி என்பது மக்களின் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் சாதனா. மாதவிடாய், பாலியல் துன்புறுத்தலைப் பற்றி மவுனமாக இருப்பதுபோல நமது சமூகம் சாதியைப் பற்றிப் பேசாமல் மவுனம் காக்கிறது என்று சாதனா நினைக்கிறார். ”இந்தப் படத்தை எடுக்கும்போது எப்படி கவுசல்யாவின் கதையைச் சொல்கிறோமோ, அதைப் போலவே அவருக்கு எதிரான நிலையை எடுத்த அவருடைய அம்மா மற்றும் உறவினர்களின் கதையையும் சொல்ல வேண்டும் என்று மெனக்கெட்டேன்” என்கிறார் சாதனா. கவுசல்யாவின் அம்மாவைப் பேச வைக்கவே நான்கு முதல் ஐந்து மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

“இந்தப் படத்தை ஜாதியவாதிகள் பார்ப்பதும் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் அல்லது நாம் ஏன் இப்படிச் செய்கிறோம் என்றும் சிந்திப்பதுதான் முக்கியமான வேலை. அதை இந்தப் படம் செய்திருக்கிறது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் சாதனா சுப்பிரமணியம். சாதிப் பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்தான் அதைப் பேசுவதற்கான தொடக்கத்தைத் தேட முடியும் என்பதை இந்தப்பட அனுபவம் தனக்குத் தந்தது என்கிறார் சாதனா. ”இது வெளியில் தெரிவது அசிங்கம்னு நினைக்கிறோம். ஆனா நாம செய்யறது தப்பு, அசிங்கம்னு நினைக்கிறதில்ல.” சாதிப் பிரச்சினையைப் பற்றிய படத்தைச் சாதியை நம்பாதவர்கள் மட்டுமே பார்ப்பதில் மனமாற்றம் நிகழ்வதில்லை. அவர்கள் ஏற்கனவே மனம் மாறியவர்கள். சாதியைத் தூக்கிப் பிடிக்கிறவர்கள் இதைப் பார்க்க வேண்டுமென்றுதான் பாதிக்கப்பட்ட தரப்பையும் வன்முறையை நடத்திய தரப்பையும் படம்பிடித்துள்ளார் சாதனா. ”ஜாதி ஒழிப்பு வெற்றி பெற ஜாதியவாதிகள் மனம் மாற வேண்டும்.”

ஏழு வருடம் முதலீட்டு வங்கியாளராக பணிபுரிந்த சாதனா, இதழியலால் ஈர்க்கப்பட்டு இரண்டு வருடங்கள் லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியில் இதழியல் படித்தார். 2009இல் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களைப் பற்றி காலம் மெக்ரே எடுத்த ”போர் தவிர்ப்பு வலையம்: இலங்கையின் படுகொலைக் களங்கள்” (No Fire Zone: Killing Fields of Sri Lanka) ஆவணப் படத்தில் பணியாற்றியிருக்கிறார். மோதல் களங்களில் தைரியமாகவும் கூர்மையான அறிவுடனும் முன்னோக்கிச் செல்வது சாதனாவுக்குப் பழக்கமாகியிருக்கிறது. ”நமது நாட்டின் பிரச்சினையான சாதியை உலகின் முன் தோலுரித்துக் காட்டுகிறோமே என்று நாம் வெட்கப்பட வேண்டியதில்லை. இந்தச் சாதியின் பெயரால் நமது மகள்களின் விருப்பங்களை நிராகரிக்கிறோம் என்பதற்காக வெட்கப்படுவோம். இந்தச் சாதியின் பெயரால் மகள் தேர்வு செய்த வாழ்க்கைத்துணையை ஆள் வைத்துப் படுகொலை செய்தோம் என்பதற்காக வெட்கப்படுவோம்,” என்கிறார் சாதனா சுப்பிரமணியம்.

The Raya Sarkar Interview  

கப்பலோட்டும் தமிழச்சி ரேஷ்மா

Nudge for Media Freedom

ஸ்னோலினும் நஜ்ஜாரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here