தமிழ்நாட்டு ஆளுநருக்கும் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி சில கல்லூரி மாணவிகளைப் பாலியல் பண்டங்களாக மாற அழைப்பு விடுத்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்கிற பொருள்படும் செய்திக் கட்டுரையை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் அக்டோபர் 9 ஆம் தேதியன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை அல்லிகுளம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் போலீசார் கோபாலை ஆஜர்படுத்தியபோது, நீதிமன்ற நடுவர் எஸ்.கோபிநாத் அவரைச் சிறைக்கு அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லையென்று விடுதலை செய்துவிட்டார். கோபாலை விடுதலை செய்வதற்கு முன்னதாக ”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி”யின் முன்னணி உறுப்பினரும் தி ஹிந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவருமான என்.ராமிடமும் நடுவர் கருத்து கேட்டார்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 124வது பிரிவைப் (ஆளுநர், குடியரசுத் தலைவரைத் தாக்குதல்) பயன்படுத்தி இந்தியாவில் இதுவரை எந்தப் பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டதில்லை; இந்தக் கைதை நீங்கள் அனுமதித்தால் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தவறான முன்னுதாரணமாக இது மாறி விடும்” என்பதை என்.ராம் பதிவு செய்தார்.

கோபாலின் விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் “எந்த அடிப்படையில் என்.ராமிடம் நடுவர் கருத்து கேட்டார் என்பதை நவம்பர் 28க்குள் தெரியப்படுத்த வேண்டும்; நவம்பர் 29ஆம் தேதியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி பத்திரிகை.காம் ஓய்வு நீதியரசர் சந்ருவிடம் “வழக்கு தொடுக்கப்பட்டவர் அல்லது அவரது வழக்கறிஞர்தானே வாதாட வேண்டும் என்பது சட்டம். நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில் என்.ராம் நீதிமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட்டார். அவர் மனுதாரரோ, குற்றம்சாட்டப்பட்டவரோ அல்ல. வழக்கறிஞரும் அல்ல. பத்திரிகை துறை சார்ந்த வழக்கு என்பதால் மூத்த பத்திரிகையாளர் என்கிற முறையில் என்.ராமின் வாதங்கள் கேட்கப்பட்டன என்கிறது நீதிமன்ற வட்டாரம். இது சட்டப்படி சரிதானா? இதே வாய்ப்பு வேறு துறை சார்ந்தவருக்கு அளிக்கப்படுமா? இது குறித்து தங்கள் கருத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டது.

அதற்கு நீதியரசர் சந்ரு அளித்த பதில்: “நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒருவர் அவர்களிடையே புகுந்து பேச ஆரம்பித்தால் ”சம்மன் இல்லாமல் ஆஜராகிறாயே” என்று கூறுவதுண்டு. நீதிமன்ற வழக்கில் யாரையேனும் விசாரிக்க வேண்டுமென்றால் அதற்காக உரிய அழைப்பாணை (ஆங்கிலத்தில் – சம்மன்) செய்து வரவழைப்பார்கள். இதைத்தான் மனோகரா திரைப்படத்தில் சிவாஜியை மன்னர் ”நீ ஏன் அழைத்துவரப்பட்டிருக்கிறாய் என்று தெரியுமா?” என்ற கேள்விக்கு சிவாஜியின் பதில் இதுவாக இருந்தது. ”நான் அழைத்துவரப்படவில்லை. இழுத்து வரப்பட்டிருக்கிறேன்”. இந்த வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. நீதிமன்ற அழைப்பாணைக்குப் பிறகும் மன்றத்தில் வருகை தரவில்லையென்றால் சாட்சிகளையோ, வழக்காடிகளையோ கட்டாயமாக வரவழைப்பதற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடிகளையும், அவர்கள் தரப்பு சாட்சிகளையும் மூன்றாம் தரப்பு சாட்சிகளையும் விசாரித்து அவர்களது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த பின்னரும் நீதிமன்றம் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் நீதிமன்றத்தின் முன்னால் வருகை தர உத்தரவிடலாம். அதேபோல் துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்களை நேரில் வரவழைத்து கோரி பெறலாம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டமன்றங்களிலும் உறுப்பினரல்லாத எவரும் நுழைந்து பேச முடியாது. இதற்கு விதிவிலக்காக நாடாளுமன்ற அவைகளில் அட்டர்னி ஜெனரலையும், சட்டமன்றங்களில் மாநில அட்வகேட் ஜெனரலையும் வரவழைத்து கருத்து கூறலாம்.

நக்கீரன் கோபாலை விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க காவலர்கள் அல்லிக்குளம் குற்றவியல் நடுவர்மன்ற நடுவரை அணுகியபோது அந்தச் செய்தியைக் கேட்டறிந்த இந்து குழுமத் தலைவர் திரு.N.ராம் அங்கு நேரில் சென்றார். கோபால் மீது 124 பிரிவின் (இந்திய தண்டனைச் சட்டம்) கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பிராசிக்யூஷன் தரப்பில் கூறப்பட்ட போது திரு.N.ராம் தாமாகவே முன்வந்து தனது கருத்தைக் கேட்குமாறு கோரிக்கை விடுத்தார். திரு.N.ராம் அவர்களின் பத்திரிகை பின்புலத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட குற்றவியல் நடுவர் அவரது கருத்தைக் கேட்டுக்கொண்டார். இவ்வழக்கில் பிரிவு 124 (இந்திய தண்டனைச் சட்டம்) பொருந்தாது என்றும் அப்படி பதிவு செய்தால் அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்குமென்றும் தனது கருத்தைக் கூறினனார். இப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத ஒருவரின் கருத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறேதுமில்லை. ஒரு நீதிபதி எல்லா துறைகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே தனது சந்தேகங்களை நீதிமன்றத்தின் முன்னுள்ள எவரையேனும் கேட்டுத் தெரிந்து கொள்வதிலும், இல்லையெனில் அப்படிப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்துத் தெரிந்து கொள்வதிலும் தவறேதுமில்லை.

நான் ஆஜராக வேண்டிய வழக்காக இல்லாவிட்டாலும் ஒரு மூத்த வழக்கறிஞர் என்ற அடிப்படையில் நீதிபதிகள் எனது கருத்தைப் பல சந்தர்ப்பங்களில் கேட்டறிந்ததுண்டு. திரு.N.ராம் பத்திரிகைத் துறையில் சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் தென்னிந்தியாவில் மிக முக்கியமான பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்ற முறையிலும் அவரது விருப்பத்தின் பேரில் குற்றவியல் நடுவர் கேட்டறிந்ததில் தவறேதுமில்லை. இதேபோல் நீதிமன்றங்கள் பல முறை நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளன.

வழக்காடிகள் உரிய வழக்கறிஞரை அமர்த்த இயலாத போதும் அவர்கள் நீதிமன்றத்தில் தோன்றாத் தரப்பினராக இருக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலும் சிக்கலான சட்டப்பிரச்சினைகள் எழக்கூடிய வழக்குகளிலும் நீதிமன்றமே ”அமிகஸ் க்யூரி” (நீதிமன்றத்தின் நண்பர்) என்ற முறையில் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தி நீதிமன்றத்திற்கு உதவி செய்ய கேட்டுக் கொள்வதுண்டு. பம்பாய் தாக்குதல் வழக்கில் கைதான பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் கசாப் என்ற குற்றவாளிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கை நடத்துவதற்கு வக்கீல்கள் யாருமே முன்வராதபோது உச்சநீதிமன்றமே திரு.ராஜு ராமச்சந்திரன் என்ற மூத்த வழக்கறிஞரை நியமனம் செய்து வாதாடும்படி கேட்டுக் கொண்டது. ஒரு குற்றவாளிக்கு வசதியில்லையென்றாலும் அவரது வழக்கை வாதாடுவதற்கு அவரது தரப்பில் இலவசமாக வக்கீல் அமைத்துக் கொடுப்பது நீதிமன்றத்தின் கடமை.”

வழக்கு நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது நீதியரசர் சந்ரு போன்ற சட்ட நிபுணர்களின் கருத்துகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமென்று இப்போது டாட் காம் எதிர்பார்க்கிறது.

Exclusive: The Raya Sarkar Interview

Flawed State Policy led to loss of over 300 lives

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here