இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை, 72 வயது முதியவர் உட்பட நான்கு குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரு மாதத்தில் 60 இலங்கை தமிழர்கள் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளனர்.

இலங்கை அகதிகள்
இந்தியாவில் அகதியாக தஞ்சம் கோரி சமீபத்தில் தனுஷ்கோடி வழியாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்த இலங்கை தமிழர்கள்

அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அந்நாட்டில் உணவுத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இலங்கை தமிழர்கள் இந்திய, இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் கோரி வந்த வண்ணம் உள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை காலை ஆறு மணியளவில் மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பிணி பெண், ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 இலங்கை தமிழர்கள் புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து இறங்கினர்.

இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலிப் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேசாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை வந்தடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.பின்னர் 18 இலங்கைத் தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 22ந்தேதி வரை ஒரு மாத காலத்தில் 60 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

தாயகத்தை விட்டு வர தமிழர்கள் சொல்லும் காரணம்

இலங்கை அகதிகள்
நகுஷன், பியூலா தம்பதி

இது குறித்து தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள நகுஷன் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நான் மன்னாரில் தச்சு வேலை செய்கிறேன், தொடர்ந்து பல மணி நேர மின்வெட்டு காரணமாக தச்சு தொழில் கடுமையாக பாதித்துள்ளது. மின்சாரத்துக்கு மாற்றாக ஜெனரேட்டர்கள் உதவியுடன் தச்சு தொழில் செய்யலாம் என்றால் டீசல் விலை 400 ரூபாய் தொட்டுவிட்டது. இதனால் எனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விகுரியதாகியுள்ளது,” என்றார்.

“எனக்கு திருமணம் நடந்து 5 மாதமாகிறது என் மனைவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவளுக்கு மருத்துவமனையில் மருந்து வாங்கி கொடுக்க முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து இருப்பு இல்லை என்கின்றனர். இதே நிலை நீடித்தால் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் முன் பட்டினி சாவில் இறந்து விடுவோமோ என்ற அச்சம் மனதில் ஏற்பட்டது.”

“எனவே எனது நான்கு மாத கர்ப்பிணி மனைவிக்கு நல்ல முறையில் பிரசவம் ஆக வேண்டும் என ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளேன். எங்கள் நாட்டின் இந்த நிலைமைக்கு தற்போது ஆளும் அரசியல்வாதிகள் தான் காரணம். என்னை போல் இன்னும் அதிகமானோர் இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வர காத்திருக்கின்றனர்,” என்கிறார் நகுஷன்.

கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான சாப்பாடு இல்லை

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள நான்கு மாத கர்ப்பிணி பெண் பியூலா பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் இப்போ நான்கு மாத கர்ப்பிணி. ஆனால் இலங்கையில் தற்போது உள்ள உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் ஒரு கர்ப்பிணி பெண் சாப்பிடும் ஆரோக்கியமான சாப்பட்டை என்னால் சாப்பிட முடியவில்லை.

பழங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது டன் பழங்கள் மார்கெட்டில் கிடைப்பதில்லை. இப்படி இருந்தால் எப்படி என்னால் இலங்கையில் என்னுடைய குழந்தையை ஆரோக்கியமாக பெற்று கொள்ள முடியும்.

இலங்கை அகதிகள்

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் மருந்துகளின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பல இடங்களில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. ஒருபுறம் விலைவாசி உயர்வு மறு புறம் தொடர் மின் தடை காரணமாக கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் எடுக்கும் ஸ்கேன் எடுக்க முடியவில்லை.

விலை ஏற்றத்தால் போதிய சத்து இல்லாத பொருட்களை மட்டும் சமைத்து சாப்பிட்டு உயிர் வாழ வேண்டும். இப்படி சத்து இல்லாத சாப்பாடு சாப்பிட்டால் எப்படி குழந்தை சத்துடன் பிறக்கும் என்ற கவலையில் தான் உயிரை பணயம் வைத்து கடல் வழியாக தமிழகம் வந்து விட்டோம்.

எங்களுக்கு பிறந்த நாட்டை விட்டு வருவதற்கு மனமில்லை. இருந்தாலும் வயிற்றில் உள்ள என் குழந்தையின் விதி இந்தியாவில் தான் பிறக்க வேண்டும் போல் உள்ளது.

எங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்காக உயிர் வாழ வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தில் அகதியாக தனுஷ்கோடி புறப்பட்டு வந்தோம் எப்படியும் எங்கள் நாடு ஒரு நாள் நிச்சயம் நல்ல நிலைக்கு வரும் அப்போது குழந்தையுடன் நாட்டுக்கு திரும்புவோம் என்கிறார் பியூலா.

“நாடு மீள்வது ரொம்ப கஷ்டம்”

அகதியாக தமிழகம் வந்துள்ள முன்னாள் இலங்கை போலீஸ் பிரதீப் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் இலங்கையில் போலீசாக பணியாற்றி வந்தேன். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் நான் எனது பணியை ராஜிநாமா செய்து விட்டு தற்போது வாடகை வண்டியில் ஓட்டுநராக இருந்து வருகிறேன்.

இலங்கை அகதிகள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வாடகை வாகனங்களில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் வாடகை வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் நிலைமை மிகவும் மோசமாகி விடும்.

உண்ண உணவு இல்லாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவே தான் நான் இலங்கையில் இருந்து பைபர் படகில் புறப்பட்டு அகதியாக தமிழகம் வந்துள்ளேன்.

எனக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் பால்மாவு மற்றும் கோதுமையின் விலை விண்ணைத் தொடும் அளவு உயர்ந்துள்ளதால் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி என்னால் இலங்கையில் வாழ முடியும். எனவே எனது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து கடல் வழியாக ராமேஸ்வரம் வந்து விட்டேன்.

விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

சுழற்சி முறையில் தினசரி 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது நாடு மீண்டும் நல்ல நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது.

எனவே தான் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் அகதியாக இந்தியா அழைத்து வந்துவிட்டேன். இனி எங்களுக்கு வாழ்வு இங்கு தான்.

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கு முன் வந்த இலங்கைத் தமிழர்களை இலங்கை அகதிகளாக பதிவு செய்யவில்லை என கேள்விப்பட்டேன் அது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்தியா எங்களை அகதியாக ஏற்கும் என்ற பெரும் நம்பிக்கையில் நாங்கள் கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு இங்கு வருகிறோம். இங்கு எங்களுக்கு பதிவு கொடுக்கவில்லை என்றால் நாங்கள் எங்கே செல்வது. இந்திய அரசு எங்களை அகதியாக பதிவு செய்ய வேண்டுமென என முன்னாள் இலங்கை போலீஸ் பிரதீப் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

“வாழனும்கிற ஆசையில் தான் இங்கு வந்தேன்”

இலங்கை அகதிகள்

தனுஷ்கோடிக்கு அகதியாக வந்துள்ள முதியவர் சுப்பிரமணியன் பிபிசி தமிழிடம் பேசுகையில், எனக்கு வயது 72. எனக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவி இருந்தார். இறுதிகட்ட போரின் போது குண்டு அடிப்பட்டு என் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எங்களுக்கு குழந்தை இல்லை.ம னைவி இறந்ததில் இருந்து நான் தனியாக வாழ்ந்து வருகிறேன்.

நான் யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நீண்ட காலமாக வேலை செய்து வருகிறேன். தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனால் உணவகங்களை இயக்க முடியாமல் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டது.

நான் கடந்த 30 ஆண்டுகளாக வேலை செய்து வந்த உணவகம் மூடப்பட்டதால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டு வந்தேன்.

இந்நிலையில் என்னுடன் வேலை செய்யும் அந்தோணிசாமி என்பவர் தான் தமிழகத்திற்கு அகதியாக செல்ல இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.

உடனடியாக நான் வேலை செய்த உணவகத்தில் எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி தொகை ரூபாய் 70 ஆயிரம் வாங்கி பைப்பர் படகிற்கு செலுத்தி இலங்கையில் பட்டினி சாவில் இறப்பதை காட்டிலும், என்னுடைய கடைசி காலத்தை தமிழகத்தில் அகதியாக கழிக்கலாம் என தமிழகம் வந்ததாக கூறுகிறார் முதியவர் சுப்பிரமணியன்.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here