இறைவன் மீது ஆணையாக தாங்கள் பண பேரம் பேசவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி விளக்கமளித்துள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினரகள் கூவத்தூர் விடுதியில் விடுதியில் இருந்தபோது, கோடிக்கணக்கில் பேரம் நடந்தது தொடர்பான வீடியோவை, டைம்ஸ் நவ் மற்றும் மூன் டிவி இணைந்து ஸ்டிங் ஆப்ரேசன் மூலம் வெளியிட்டன. இந்த வீடியோ காட்சியில், மதுரை மாவட்டம் தெற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சசிகலா அணியில் இணைவதற்காக ஆறு கோடி ரூபாய் வரை தருவதாகக் கூறியதாகவும், குறிப்பாக, தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதகவும் பேசியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் புதன்கிழமை (இன்று) தொடங்கியது. அப்போது சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தங்கள் தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றவே தாங்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு அளித்ததாகத் தெரிவித்தார். மேலும் அவர், மற்றவர்கள் பணம் வாங்கினார்களா என்பது பற்றி தங்களுக்குத் தெரியாது என்றும், ஆனால் தன் இறைவன்மீது ஆணையாக தாங்கள் பண பேரம் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். அரசியலில் தாங்கள் நேர்மையானவர்கள் என்றும், களங்கமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : சாணை பிடிப்பவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்