தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிடும் தனுஷ் மீது சங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்தால், தனுஷுக்காக சங்க விதியையே அடித்து துவைத்து காயப்போட்டிருக்கிறார்கள்.

குற்றம் நடந்தது என்ன?

இந்த வருடம் நடந்த திரையுலக வேலை நிறுத்தத்துக்குப் பிறகு, சென்சார் சான்றிதழ் வாங்கும் தேதியின் அடிப்படையில், சீனியாரிட்டி முறையில் படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்து வந்தது. படத்தை தயாரித்தவர்கள் சென்சார் சான்றிதழ் வாங்கிய பிறகு இந்த தேதியில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று சங்கத்துக்கு கடிதம் தர வேண்டும். சங்கம் அமைத்திருக்கும் ஒழுங்கமைவு குழு பரிசீலனை செய்து, அந்த தேதியில் படத்தை வெளியிடலாமா கூடாதா என முடிவெடுக்கும்.

இந்த விதி நடைமுறையில் இருக்கும் போதே, ஒரு வாரம் பெரிய படங்கள் வெளியானால் அடுத்த வாரம் சின்னப் படங்கள் வெளியாகும். சின்னப் படங்கள் வெளியாகும்போது பெரிய படங்களை வெளியிடக் கூடாது என்று இன்னொரு விதியையும் சங்கம் கொண்டு வந்தது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது திமிரு பிடிச்சவன் படத்தை சர்காருடன் வெளியிடுவது என முடிவு செய்தார். சர்காருடன் வெளியாகும்போது திரையரங்குகள் கிடைக்காது, ஒருவாரம் தள்ளி வெளியிடுங்கள் என்று சங்கம் சொன்ன யோசனையை அவர் ஏற்கவில்லை. கண்டிப்பா தீபாவளிக்கு என் படம் வரும் என்றார். கடைசி நேரத்தில் சங்கம் சொன்னது போல் திரையரங்குகள் கிடைக்காமல் திமிரு பிடிச்சவன் தீபாவளிக்கு வெளியாகவில்லை. நான் என் படத்தை அடுத்த வாரம் வெளியிட்டுக் கொள்கிறேன் என்றார் விஜய் ஆண்டனி. சங்கம் மறுத்தது. ஏற்கனவே பல படங்கள் அடுத்த வாரம் வருகின்றன. உங்கள் படமும் வந்தால் அந்தப் படங்கள் பாதிக்கும். நீங்கள் அடுத்தடுத்த வாரத்தில் ஏதாவது ஒன்றில் படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்றது. விஜய் ஆண்டனி கேட்கவில்லை. சங்கத்தை மீறி அடுத்த வாரமே படத்தை வெளியிட்டார். படம் பிளாப். அத்துடன், சங்க விதியை மீறியதால் விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒத்துழைப்பு இல்லை என்று கைவிரிக்க, பெப்சியும் சங்கத்தின் கோரிக்கைக்கு சம்மதிக்க, விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்படியொரு இடியாப்ப சிக்கல் இருக்கையில் தனுஷ் தனது மாரி 2 படத்தை டிசம்பர் 21 வெளியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்தார். டிசம்பர் 21 அன்று சிலுக்குவார்பட்டி சிங்கம், அடங்க மறு உள்பட அரைடஜன் படங்கள் சங்கத்தின் ஒப்புதலுடன் வெளியாகவிருப்பதால், மாரி 2 படத்தை தள்ளி வெளியிடும்படி சங்கம் அறிவுறுத்தியது. தள்ளி என்றால் பேட்ட, விஸ்வாசம் படங்களுடன் போட்டிப்போட வேண்டியிருக்கும். அது இன்னும் சிக்கல். அதனால், டிசம்பர் 21 மாரி 2 படத்தை வெளியிடுவேன் என்பதில் தனுஷ் உறுதியாக இருந்தார். சங்கத்தின் விதிப்படி தனுஷ் படங்களுக்கு தடைவிதிக்க வேண்டும், விஜய் ஆண்டனிக்கு தடை விதித்தது போல. ஆனால், தனுஷின் அடுத்த மூன்று படங்களை தயாரிப்பவர் இதற்கு முன் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த தாணு. தனுஷுடன் தயாரிப்பாளர்கள் சங்கம் மோதுவது என்பது தாணுவுடன் மோதுவதைப் போல. விஜய் ஆண்டனியைப் போல் ஒதுக்கிவிட்டு போக இயலாது. இதனால், சங்கத்தில் நடந்த மாரி 2 பஞ்சாயத்தை தமிழ் சினிமா உற்று நோக்கியது. முடிவில் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் அடங்கிப் போக முடிவெடுத்துள்ளது. எப்படி?

டிசம்பர் 21 முதல் ஜனவரி 10 வரை கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் தயாரிப்பாளர்கள் பலரும் இந்த நேரத்தில் தங்களது படம் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால், டிசம்பர் 21 முதல் ஜனவரி 10 வரை யார் வேண்டுமானாலும் எந்தப் படத்தை வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டை மொத்தமாக திறந்துவிட்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிமுறை என்பது உறுப்பினர்களாலேயே அடித்து நொறுக்குவதற்காக உருவாக்கப்படுவது. இதோ இன்னொருமுறை நிரூபணமாகியுள்ளது.
[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here