சென்னை தி.நகரிலுள்ள ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (பிப்.10) காலை, அவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் தீபா கணவர் மாதவனிடம், தன் பெயர் மித்தேஷ் குமார் என்றும், தன்னை வருமான வரித்துறை அதிகாரி எனவும் கூறிக்கொண்டு அவரது வீட்டைச் சோதனை செய்தார்.

இது குறித்து தீபாவின் வழக்கறிஞர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போதே அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து மாம்பலம் காவல்நிலையத்தில் மாதவன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரன் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தன்னை அனுப்பியது மாதவன்தான் என்றும், சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக்கூறி வருமானவரி அதிகாரிபோல் அவர்தான் நடிக்க சொன்னார் என்றும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபாகரன் சரணடைந்தநிலையில், மாதவன் தன்னுடைய செல்போனைச் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்