என்னிடம் கடுமையான கேள்விகளைக் கேட்கும் நீங்கள் மோடியிடம் மாம்பழம், குர்தா பற்றி கேட்கிறீர்கள் – பத்திரிகையாளர்களிடம் ராகுல் காந்தி (வீடியோ)

0
442

2019 மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு – 7-வது கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியோடு பிரசாரம் நிறைவுக்கு வந்தது.

அதற்கு முன்னர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது – 

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்து கொண்டது. நரேந்திர மோதி கூறிய பொய்களை மக்களின் பார்வைக்கு நாங்கள் கொண்டு சேர்த்தோம் என்றார். மேலும் பேசிய அவர் மக்களவைத் தேர்தலில் மக்கள் என்ன முடிவு அளிப்பார்கள் என்பதை நான் முன்னதாகவே கணித்துக் கூற விரும்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அவர்கள் யாரைத் தேர்வு செய்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும். 

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்த கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை. மோடி மீண்டும் பிரதமராக முடியாது: மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதிபடத் தெரிவித்த ராகுல், பிரதமர் மோடி தனது தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளில் 90 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்துவிட்டது. 

தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து அவதூறு பேசியதன் மூலம் மீதமுள்ள 10 சதவீத வாய்ப்புகளை மோடியே முறியடித்துவிட்டார்.

 ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நான் விடுத்த அழைப்பை மோடி ஏற்கவில்லை. 5 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த அவர், இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை. 

ஆனால், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு, திடீரென பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அதிலும் கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் என்னதான் தத்துவங்களைப் பேசினாலும், அவை காந்தியின் தத்துவமாகிவிடாது. 

இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முறையாக இல்லை என்பதுதான் எனது கருத்து. 

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார அட்டவணையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் முன்னதாக பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தது. 

ஒரு மாநிலத்தில் பிரச்னை என்று கூறி தேர்தல் பிரசாரத்தை முன்னதாக முடிக்க நினைத்தால், அதனை உடனடியாக அமல்படுத்தி இருக்க வேண்டும். 

ஆனால், மேற்கு வங்கத்தில் மோடியின் பிரசாரத்துக்கு பிறகுதான் ஒட்டுமொத்த பிரசாரத்தையும் நிறுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை எவ்வாறு ஏற்க முடியும் என்றார் ராகுல் காந்தி.

என்னிடம் மிகக் கடுமையான கேள்விகளை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். ஆனால், மோதியிடம் மாம்பழம், குர்தா பற்றி கேட்கிறீர்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here