என்னதான் சொல்லுது ஆகமம்?

0
1734

ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர்களை கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்ததில் இருந்து பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆகம விதிப்படி என்றால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாதா? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் அர்ச்சகர்களாக ஆக முடியுமா? இந்தத் தீர்ப்பை ஏன் பிராமணர் சங்கமும் ஆதரிக்கிறது; திராவிடர் கழகமும் ஆதரிக்கிறது? என பல்வேறு கேள்விகள் மக்கள் மனங்களில் எழுந்த வண்ணமும், விவாதங்கள் நடந்த வண்ணமும் உள்ளன.

சரி ஆகம விதிகள் என்றால் என்ன?

ஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்கள். கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குட முழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம் பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு, வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.

சிவாகமங்கள் மொத்தம் 28, வைணவ ஆகமங்கள் (சம்ஹிதைகள்) இரண்டு, சாக்த தந்திரம் ஒன்று, கௌமாரத் தந்திரம் ஒன்று என 32 ஆகமங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் சிவாகமங்கள் ஒன்பதும், வைணவ ஆகமங்கள் இரண்டும்தான் உள்ளன. அவற்றுள்ளும், காமிய ஆகமம்தான் 90 சதவீதக் கோயில்களில் பின்பற்றப்படுகின்றது.

ஆகம அறிஞர் சத்தியவேல்முருகன்
ஆகம அறிஞர் சத்தியவேல்முருகன்

அடுத்துக் காரணாகமம் பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், தில்லைக் கோயிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது, அவ்வளவுதான். வைணவக் கோயில்களில் (தென் கலை), பாஞ்சரத்னம், வைகானசம் ஆகிய இரு சம்ஹிதைகளும் வழக்கில் உள்ளன.

இப்படி வரிசைப்படுத்தப்பட்ட எந்த ஆகம நூல்களிலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கவில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே அர்ச்சகராக தொடர வேண்டும் என்பது பற்றியும் கூறவில்லை என்றும் ஆகம அறிஞரான சத்தியவேல் முருகனார் கூறியுள்ளார்.

asiriyar press meet 004.jpg

மேலும், தமிழக அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் ஆணையை உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்யவில்லை என்பதோடு, அதன் மீதிருந்த தடையையும் நீக்கியுள்ளதாக கூறும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, வைணவக் கோயில்களுக்குத் தனியாகவும், சிவன் கோயில்களுக்குத் தனியாகவும் பயிற்சி பெற்று தயாராக உள்ள 200 பேர்களுக்கும் மேற்பட்டோரை இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக தமிழக அரசு நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும் என்று கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்