மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன், கட்சியை கொடியை ஏற்றினார். பின்னர் நேற்று(வியாழக்கிழமை) கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

குறிப்பாக நேற்றிரவு திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, ‘வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’ என்று உறுதி படக் கூறினார்.
இதையடுத்து, இன்று காலை சென்னைக்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்வி பதிலளித்த அவர், ‘நாங்கள் மக்களோடுதான் கூட்டணி வைத்துள்ளோம். மக்கள் நலன்தான் எங்கள் கொள்கை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால், கூட்டணியும் வைக்கக் கூடும். எங்களுடன் கூட்டணி வைப்பதென்றால், நேர்மையாளராக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

தொடர்ந்து ஒரு செய்தியாளர், சமீப்த்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார். இதைதொடர்ந்து அதிமுகவினர், ரஜினி எங்களைத்தான் ஆதரிக்கச் சொல்கிறார் என்று கூறிவருகின்றனர். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘எந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார்” என்று எனக்குத் தெரியவில்லை’ என பதில் கூறினார்.

சில தினங்களுக்கு முன்னர் ரஜினி பேசியபோது, “தமிழகத்தின் முக்கியப் பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து, தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து, அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து, ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று மக்களவைத் தேர்தல் குறித்து கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here