குடகு விடுதியிலுள்ள தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக காவல்துறை மிரட்டுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை ஒதுக்கி வைத்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஒன்றிணைந்தனர். இதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். தற்போது, இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடகா மாநிலம் குடகுவிலுள்ள விடுத்தியில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அந்த விடுதியின் உள்ளே சென்று தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், குடகு விடுதியிலுள்ள தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக காவல்துறை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவர், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டுபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதை உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றார். எடப்பாடி பழனிசாமி அணியில் எத்தனை ஸ்லீப்பர் செல் உள்ளனர் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும், அதற்கான நேரம் வரும்போது தெரிய வரும் என்றார்.

கட்சியைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவளிக்க 20 கோடி ரூபாய் வரை சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: விஜய்யை பாராட்ட மாட்டேன்…. இது சேரன் ஸ்டேட்மெண்ட்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்