புல்வாமா தாக்குதல் ஒரு சதிச் சம்பவம் என்றும் தேர்தலுக்காகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சமாஜவாடி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு தாமாகவே அதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ராம் கோபால் முன்வைத்துள்ள கருத்து புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. பாட்னா அருகே உள்ள சைபை எனும் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராம்கோபல் யாதவ் பேசியபோது …

சிஆர்பிஎஃப் வீரர்கள் மத்திய அரசு மீது அதிருப்தியில் உள்ளனர். வாக்குகளுக்காக வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். ஜம்முவுக்கும், ஸ்ரீநகருக்கும் இடையே பாதுகாப்பு சோதனைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. விமானத்தில் அனைத்து வீரர்களையும் அனுப்பி இருக்கலாம் என்று துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள். ஜம்மு வரை விமானத்தில் சென்றிருக்கலாம் அல்லது பாதுகாப்புப் படையின் குண்டு துளைக்காத வாகனத்தில் சென்றிருக்கலாம்.

முதல் முறையாக தாக்குதல் நடந்த அன்று, ஸ்ரீநகர் முதல் ஜம்மு வரை எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் நடைபெறாமல் வீரர்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வீரர்கள் அனைவரும் முதல்முறையாக சாதாரண பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். பேருந்துகள் எங்கும் நிறுத்தப்படாமல் சென்றுள்ளன, குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் சதி அடங்கியிருக்கிறது. இந்த சமயத்தில் இதை நான் கூற விரும்பவில்லை. நாட்டில் புதிய அரசு அமையும்போது, இதுகுறித்து விசாரணை நடத்தினால், பெரிய மீன்கள் அதில் சிக்கலாம் என்று அவர் கூறியதாக ஏ என் ஐ செய்தி தெரிவிக்கிறது .

புல்வாமா தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள ராம் கோபால் யாதவ், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

கண்ணியமற்ற அரசியலுக்கு ஒரு முன்னுதாரணத்தை ராம் கோபால் யாதவ் ஏற்படுத்தியிருக்கிறார். சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் குறித்து கேள்வி எழுப்பி, விமர்சித்த அவர், தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நம் தேசத்தின் வீரர்களுடைய மனஉறுதியை குலைப்பதாக அவரது கருத்து அமைந்துள்ளது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here