சிபிஐ இயக்குனர் பொறுப்பில் இருந்து தீயணைப்பு துறை தலைவராக மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா அந்த பொறுப்பை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்பின்னர் அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர் பணியில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முடிவு செய்யும் வரை, அலோக் வர்மாவால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது. முடிவில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில் தேர்வுக் குழு என் தரப்பு நியாயங்களையோ, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அறிக்கையையோ ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Courtesy : Indian Express
Courtesy : Indian Express

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்