கடந்த பத்தாம் தேதி காலை அடிஸ் அபாபா நகரில் இருந்து 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது எத்தியோப்பியா நாட்டு ‘737’ ரக போயிங் விமானம்.

கிளம்பிய சில நிமிடங்களுக்குள் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 149 பயணிகள் மற்றும் விமானிகள் ,பணியாளர்கள் 8 பேர் உள்பட 157 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் உள்ள குரல் பதிவுகளின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

தற்போது, விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறு தடயத்தின் அடிப்படையில் விபத்துக்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம் என விமானப் போக்குவரத்து துறை சார்ந்த வல்லுனர்களும், பொறியாளர்களும் கருதுகின்றனர்.

போயிங் ரக விமானங்கள் விண்ணில் உயரக்கிளம்பி பறக்கும்போதும், மிருதுவாக தரையிறங்கும்போதும் ‘ஸ்டேபிலைசர்ஸ்’ என்னும் வால் பகுதியில் உள்ள சமநிலைப்படுத்தும் கருவிகள்தான் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதியை தாழ்த்தவும், உயர்த்தவும் மிக முக்கிய காரணியாகச் செயல்படுகின்றது.

இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியில் பொருத்தப்பட்டுள்ள இரு சென்சார்களில் இருந்து வெளியேற்றப்படும் அதிர்வலைகள் விமானத்தின் மூக்குப்பகுதியை இயக்கி உயரக்கிளம்பவும், தாழ்ந்து இறங்கவும் தேவையான பணியை செய்கிறது.

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களில் உள்ள இந்த தானியங்கி ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவிகள் விமானத்தின் மூக்குப்பகுதியை 10 வினாடிகளில் 2.7 டிகிரி செங்குத்தான கோணத்தில் தரையை நோக்கி திசை திருப்புவதாக முன்னர் தெரியவந்தது. இந்த வேகம் மிக அதிகமானது என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் ஏர் விமான விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த விபத்திலும் இதேபோல் நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து கிடைத்த விமானிகளின் குரல் பதிவின் மூலம், அந்த விமானத்தின் விமானிகள் மிக அதிகமான வேகத்தில் தரையை நோக்கி தாழ்ந்து செல்லும் மூக்குப்பகுதியை நிலைப்படுத்த முயன்றுகொண்டிருக்கும்போதே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய தகவல் தெரியவந்தது.

இதேபோன்ற ஒரு இக்கட்டான நிலை எத்தியோப்பிய போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்துக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த விபத்து நடந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ’ஜேக்ஸ்குரு’ என்ற பாகத்தின் மூலம் நம்பத்தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வால் பகுதியில் இருந்து மூக்குப்பகுதியை இயக்கும் இந்த ‘ஸ்டேபிலைசர்ஸ்’ கருவியின் தவறான செயல்பாட்டால்தான் இந்த எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்னும் முக்கிய ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது.

இருப்பினும், எத்தியோப்பியா போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டியில் உள்ள விமானிகளின் கடைசி நிமிடக் குரல் பதிவுகள் இந்த கருத்தை உறுதிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here