தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர்களின் கேள்விகளுக்கு இரண்டு நாள்கள் பொறுத்து பதில் கூறுவதாக தெரிவித்தவர், தன்னுடன் எடுத்து வந்த அறிக்கையை வாசித்தார். அவ்வறிக்கை…

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கு என்னோட பணிவான வணக்கம்.

போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க. நானும் சந்தோஷமா பொறுப்பு ஏத்துக்கிட்டு மனசாட்சியோட நேர்மையா செயல்படுறதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.

திடீர்னு சர்கார் பட சம்பந்தமா சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க பொறுப்பில் இருக்கிற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிக்க நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனால், அதுல பல அசெளகரியங்கள் நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிற தேர்தல்ல நின்னு ஜெயிக்காமல் நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன்.

சங்கத்துல சில தவறான நடவடிக்கைகளை என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாத்தி அமைக்க வேண்டி இருக்கு. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய சங்கத்தோட பெயரையும் சங்க உறுப்பினர்களோட நலனையும் காப்பாற்ற முடியாதோன்னும் தோணுது. அதை உடனடியா சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன்.

அதுக்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு, முறையா தேர்தல் நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வர்றது தான் ஆனா மற்றவர்கள் நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கிற நிலைமையில், இப்ப தேர்தல் நடத்தறது வீண் செலவுன்னு நிறையப்பேர் அபிப்ராயப்படலாம். ஆனால், சங்கமே வீண்போறதைவிட, செலவு வீணாகறது தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்கிறவங்க ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்குப்பிறகு தேர்தலை நடத்த முடிவு பண்ணினா, நான் அதுல மீண்டும் தலைவர் பதவில முறையாக நின்னு மெஜாரிட்டி ஓட்டோட ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு தொடர்ந்து கடமையோட செயல்படுறேன்.

இப்படிக்கு
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமையைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே.பாக்யராஜ்

எனக்கு நேர்ந்த அசெளகர்யங்கள் என்ன? ஒழுங்கீனங்கள் என்னங்கறதை, சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல.

அதோட, முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன்படாதாதலே வேறு வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப்பெரிய படமான சர்கார் படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளிடம் மன்னிப்பு கோருகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here