(November 28, 2015)

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.

வட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.

“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.

“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடசென்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.

இந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.

எண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.

படங்கள்: அமிர்தராஜ் ஸ்டீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here