பிரதமர் மோடியை நினைத்து எனக்கு பயமில்லை. நான் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன். ஆனால், தமிழக முதல்வரால் தூங்க முடியுமா? நேர்மையில்லாத தமிழக முதல்வரால் தூங்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடினார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார். தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல்வேறு தரப்பு மக்களிடம் உரையாற்றி, குறைகளைக் கேட்டறிந்தார். உப்பளத்துக்குச் சென்று உப்பு உற்பத்தி செய்யும் இடங்களைப் பார்வையிட்டார்.

அதன்பின் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற நாசரேத் தேவாலயத்தில் வழிபாடு நடத்தினார். அதன்பின் மக்களிடம் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

எனக்கு பிரதமர் மோடியை நினைத்து பயமில்லை. நான் இரவில் படுக்கையில் படுத்தால் 30 வினாடிகளில் தூங்கிவிடுவேன். ஆனால், தமிழக முதல்வர் தூங்குவாரா, அவருக்கு எவ்வளவு நேரமாகும். ஊழல் படிந்த தமிழக முதல்வராக இரவில் தூங்க முடியாது, அவர் நேர்மையானவர் இல்லை.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேர்மையில்லாதவராக இருப்பதால்தான், பிரதமர் மோடிக்கு எதிராக எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை. தமிழக முதல்வர் ஊழல் நிறைந்தவராக இருப்பதால்தான் பிரதமர் மோடி தமிழக மக்களைக் கட்டுப்படுத்துகிறார்.

பிரதமர் மோடி, தமிழகத்தைத் தனது தொலைக்காட்சி போல் நினைக்கிறார். ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, தனக்கு என்ன விருப்பமோ அதைச் செய்கிறார். ரிமோட் மூலம்தான் மத்திய அரசு தமிழகத்தைக் கட்டுப்படுத்துகிறது. தேவைப்பட்டால் தொலைக்காட்சி ஒலியைக் கூட்டுகிறார், குறைக்கிறார். அதற்கு ஏற்றாற்போல் தமிழக முதல்வர் உரக்கப் பேசுவார், மெதுவாகவும் பேசுவார். தமிழக மக்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால், மக்கள் ரிமோட்டிலிருந்து பேட்டரியை எடுக்கப்போகிறார்கள், அவர்களைத் தூக்கி எறியப்போகிறார்கள்.

உப்பு தயாரிக்கும் இடத்துக்குச் சென்று அவர்களின் பணியைப் பார்த்தேன். அங்கு ஒரு தொழிலாளி என்னிடம், ‘உப்பு என்பது கரோனாவுக்கு எதிராகச் செயல்படும். அந்த உப்பைத் தயாரிக்கிறேன். இந்த உப்பு மருந்து தயாரிக்க அனுப்பப்படுகிறது. குறிப்பாக, கரோனா தடுப்பூசிக்கு அனுப்பப்படுகிறது. உப்பு மட்டும் உற்பத்தி செய்யவில்லை. கரோனாவிலிருந்து நாட்டைக் காக்கிறேன்’ என்றார். இதுதான் தமிழகத்தின் அழகாக இருக்கிறது.

இந்தியாவின் வேலையின்மை மற்றும் சீன உற்பத்திக்கு கடும் போட்டி அளிக்க வேண்டுமானால், நாம் நமது சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். செல்போன் முதல் துணிகள் வரை அனைத்தும் சீனாவில் இருந்துதான் வருகின்றன. இதைத் தடுக்க நமது சிறு, குறுந்தொழில்கள் மூலம்தான் சாத்தியம். வேலையின்மையையும் நாம் சிறு, குறுதொழில்கள் மூலம் போக்க முடியும். தமிழக அரசு சிறப்பாக, ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால், தமிழகத்திலும் மேட் இன் தமிழ்நாடு சாத்தியமாகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.

லட்சக்கணக்கான இளைஞர்கள், நம்பமுடியாத அளவில் அதிகமான உத்வேகத்துடன், சக்தியுடன், கனவுகளுடன், வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், வேலையில்லாத இளைஞர்களை அதிகமாகக் காண முடியும். வேலை என்பது பெரிய சவாலாக இருக்கிறது”.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here