தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில், பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவை இரண்டாவது முறையாக டிடிவி தினகரன் சந்தித்துள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தைக் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது, அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கி வைக்கும் முடிவில் மாற்றமில்லை என்றும், தினகரனைக் கட்சியில் உள்ளவர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் எனவும் தமிழக அமைச்சர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் தான் மீண்டும் கட்சிப் பணி தொடரப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இதனால் அதிமுக அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டு டிடிவி அணி, எடப்பாடி அணி என இரண்டு அணியாக உடைந்தது.

தற்போது டிடிவி தினகரனுக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளநிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை, டிடிவி தினரகரன் சந்தித்துள்ளார். இதனால் இந்தச் சந்திப்பு முக்கியமாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, டிடிவி தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கத்தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : நீங்கள் ஜாலியான பேர்வழியா? மனநல மருத்துவர் ரங்கராஜன் கூறுவதைக் கேளுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்