எச்.ஜி.ரசூல்: கண்ணாடி

Tribute to poet H.G.Rasool who passed away on 5th August 2017

1
897
கவிஞர் எச்.ஜி.ரசூல்

இவை ஒரு வாசகனின் குறிப்புகள்; தொழுகைப் பள்ளிவாசல்கள் பெண்களுக்குக் கதவுகளைத் திறக்காதபோது தர்காக்கள் அவர்களுக்கு நிழல் தந்தன. தர்காக்கள் தரும் அந்தச் சுதந்திரமான இடத்தைத் தடை செய்து விடாதீர்கள் என்று ரசூல் எழுதியிருந்தார்; உண்மைதான். இந்தப் பண்பாட்டு உண்மையை 1980களில் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதிகள் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் இந்தச் சீர்திருத்தவாதிகளால் வரதட்சணை இல்லாத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடந்தன. சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்குமான இடைவெளியென்பதைச் சொற்களால் நிரப்ப முடியும். சில சமயங்களில் பேசப்படாத அல்லது எழுதப்படாத சொற்களால் இந்த இடைவெளிகள் அப்படியே அகண்டு போயிருக்கின்றன.

அஞ்சுவன்னம் பீர்முஹமதிய்யா முஸ்லிம் அசோஷியேஷன் என்கிற ஜமாஅத் ரசூலை ஊர் விலக்கம் செய்தபோது இந்தியா டுடே தமிழ் இதழுக்காக செய்தி சேகரிக்க தக்கலைக்குச் சென்றேன். ”மைலாஞ்சி” என்கிற கவிதைத் தொகுப்பில் “ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி?” என்கிற வரிகளை எழுதியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜமாஅத் கூறியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சேனம்மாள் போன்ற பெண் இறைநேசர்கள் இருப்பதுபோல 1,24,000 நபிமார்களில் பெண் நபிகளும் இருந்திருப்பார்கள் என்கிற சிந்தனையிலிருந்து இந்த வரிகள் எழுதப்பட்டதாக ரசூல் என்னிடம் சொன்னார். அவருடைய வரிகள் நியாயமானவையே. ஜமாஅத்திடம் கருத்துக் கேட்டபோது அவர்களுக்குப் பெரிய தெளிவு இருக்கவில்லை. சந்தேகத்துக்குரிய அல்லது வரலாற்றுத் தெளிவற்ற ஒரு விஷயத்தின் மீது அவசரப்பட்டு தேவையில்லாமல் தீர்ப்பு சொல்லிவிட்டு கையைப் பிசைவதாக அவர்களுடைய அணுகுமுறை இருந்தது. இப்போது அதே ஜமாஅத்தில் எழுத்தாளர் ஹலீமா தலைவராக இருப்பது மகிழ்ச்சிக்குரிய முன்னேற்றம். எழுத்தைப் புரிந்துகொள்பவர்கள் ஜமாஅத் நிர்வாகத்தில் இருந்திருந்தால் பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த முரண்பாட்டுக்கு இடம் ஏற்பட்டிருக்காது.

மிதமான குடியை, பாதிப்பில்லாத குடியை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதைத் தரவுகளுடன் வாதாடினார் ரசூல்; மூலப் பிரதிகளுடன் ஆதாரங்களின் பலத்துடன் ரசூல் மேற்கொண்ட அந்த வாதங்கள் அவரது உழைப்புக்கும் முஸ்லிம் சமூக சீர்திருத்தத்தில் அவரது கரிசனத்துக்கும் சாட்சியங்களாக இருக்கின்றன. திருக் குர்ஆனில் சொல்லப்படுவதுபோல எந்தவொரு சமூகமும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளாதவரை, இறைவன் அதனைச் சரிசெய்வதில்லை. ரசூல் சமூகத்தின் கண்ணாடியாக இருந்தார். தாவூத் ஷா, நாகூர் சித்தி ஜுனைதா பேகம், தோப்பில் முகமது மீரான், பி.ஜைனுல் ஆப்தீன், சல்மா ஆகியோரது வரிசையில் ரசூலுக்கும் இடமிருக்கும். முத்தலாக்கின் துஷ்பிரயோகத்தை தோப்பில் முகமது மீரான் அளவுக்குச் சொன்னவர்கள் மிகவும் குறைவு. முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்கான இடம் பற்றிய பேச்சு, மறுபேச்சுக்கு ரசூல் முக்கியமான தொடக்கம்; முடிவல்ல. அவர் விரும்பிய உரையாடல்கள் இன்னும் நீண்டு செல்லும்.

குறிப்பு: கவிஞர் ரசூல் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தனது 59வது வயதில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு இப்போது தனது அஞ்சலியைப் பதிவு செய்கிறது.

இதையும் படியுங்கள்: முஸ்லிம் பெண்களுக்கு எதிரான சடங்கு பற்றிய உரையாடல்

இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

1 கருத்து

ஒரு பதிலை விடவும்