எங்கே செல்கிறது ஸ்டாலினின் அரசியல்?

0
718

திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் “நமக்கு நாமே” என்ற சுற்றுபயணத்தை தொடங்கி நடத்திக் கொண்டு இருக்கிறார். சாலையில் சைக்கிள் ஓட்டுவதும், வயலில் இறங்கி ட்ராக்டர் ஓட்டுவதும், டீ, ஜிகிர்தண்டா குடிப்பதும் என அமர்க்களப்படுத்தி வருகிறார். மக்களை கவருவதற்காக செய்யும் இந்த செயல்கள் பொது மக்களால் எப்படி பார்க்கப்படுகிறது, கிண்டல் அடிக்கப்படுகிறது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கும் போது விவேகானந்தா கேந்திராத்திற்கு சென்று அங்குள்ள சாமியார்களை சந்தித்ததையும், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கு சென்று திரும்பிய பின்னர் திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று சொன்னதையும் எப்படி பார்ப்பது என்பதுதான் பெரிய கேள்வி… இதன் மூலம் தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று நினைக்கிறாரா ஸ்டாலின்?

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களை ஒருங்கிணைத்த அரசியல் திட்டத்தைத்தான் இதுவரை தமிழக அரசியல் சூழலில் வைத்து வந்துள்ளது. மதம் சார்ந்த செயல் திட்டங்களை தீட்டினாலும், செய்தாலும் அது அரசின் கடமையாகத்தான் இருக்குமே ஒழிய திமுகவின் செயல்திட்டமாக இருக்காது.

இந்திய அரசியல் சூழலை எடுத்துக் கொண்டால், வெளிப்படையாக ராமன் கோயிலை கட்டுவோம், சட்டப் பிரிவு 370யை நீக்குவோம் என்பன உள்ளிட்ட இந்துத்துவ அடிப்படைவாதத்தை பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லியது. அதனை முன்னிறுத்தி வட மாநிலங்களில் பிரச்சாரமும் செய்தது. ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வரும் போது மீனவர் பிரச்சனை, ஈழப்பிரச்சனை என்றுதான் அதனால் பேச முடிந்தது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கான கோஷமாக வளர்ச்சி, சுகாதாரம் என்றுதான் பாஜக முன் வைத்தது. வெறும் இந்துக்கள் மட்டும் வாக்களித்து பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்குத் தெரியும்.

கடந்த தேர்தல்களில் திமுக தோற்று போனதற்கும் வெற்றி பெற்றதற்கும் இந்துமதம் சார்ந்த எதிர்ப்போ, ஆதரவோ தேர்தல் பிரச்சனையாக ஒருபோதும் இருந்தது இல்லை. மாறாக மக்கள் பிரச்சனையே எல்லா தேர்தல்களிலும் பிரதானமாக இருந்தது. இதனை புரிந்து கொள்ளாமல் ஏதோ பெரியார் வழி, அண்ணா வழி என்று சொல்வதால் தோற்று போய்விட்டதாய் நினைத்தால் ஸ்டாலினுக்கு தோல்வி தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

இந்த மொத்த சுற்றுப்பயண திட்டமும் எந்த கருத்தியல் பின்புலமும் இல்லாத கார்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. “இப்படி எல்லாம் பேசினால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று யாரோ தவறாக வழிகாட்டி இருக்கிறார்கள். எப்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் திராவிட கருத்தியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையோ அதே போல் திராவிடக் கொள்கைக்கும் ஸ்டாலினுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை ஸ்டாலின் தன் பேச்சின் மூலம் நிருபித்துள்ளார்” என்று திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறி இருப்பதை மறுப்பதற்கில்லை.

சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து ஆழம் பார்த்தார் ஸ்டாலின். சமுதாயத்தில் அதற்கான எதிர்ப்பு கிளம்பவே “வாழ்த்தை நான் போடவில்லை. பேஸ்புக்கை நிர்வகிப்பவர்கள் தவறு செய்துவிட்டார்கள்” என்று வேலையாட்களின் மேல் பழி போட்டு தப்பித்துக் கொண்டார். அதன் தொடர்ச்சிதான் ஸ்டாலின் “90 சதவீத இந்துக்கள் திமுகவில் இருக்கின்றனர்” என்று கூறியதும்.

ஸ்டாலின் இப்படி சொல்வதன் மூலம் யாரை திருப்திபடுத்தப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியம். ஸ்டாலின் யாரை நினைத்து இப்படி சொன்னாலும் அதை “அவர்கள்” நம்ப மாட்டார்கள். அது தமிழ்நாட்டு அரசியலில் எடுபடவும் எடுபடாது. தமிழ்நாட்டின் சமூக வரலாறு, அரசியல் வரலாறு தெரியவில்லை என்றால் பரவாயில்லை. பக்கத்தில் இருக்கும் தந்தை கருணாநிதியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டாம். சமூக உணர்வோடு அரசியல் களத்தில் வேலை செய்த தொண்டன் கருணாநிதியிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஸ்டாலின்.

நீங்கள் கோயிலுக்கு போனதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். திமுகவில் இருப்பவர்கள் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று சொன்னதற்கும் ஓராயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். இந்து மதத்தை பேசி மக்களை ஒன்றிணைக்க முடியாது. நீங்கள் மக்களின் பிரதிநிதியாகத்தான் ஆக முடியுமே தவிர மதத்தின் பிரதிநிதியாய் ஒருக்காலும் ஆக முடியாது என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள் “மக்கள் தளபதியே”…

பின்குறிப்பு: அக்டோபர் 14ஆம் தேதி மேம்படுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்