எங்களைக் கவனியுங்கள்…!

0
1009

சாலைகளில் இறங்கி, தங்களது உரிமைகளை பெறப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். முடிவு? காவல்துறை வழக்கம் போல வன்முறைகளை கையாண்டு அவர்களை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி வேறு இடத்தில் இறக்கி சென்றுவிட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாகவே சென்னையின் முக்கிய சாலைகளில் திருநங்கைகள் தங்களுக்கு வேலை அளிக்கவேண்டும், வசிப்பதற்கு வீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

”நாங்கள் கேட்பது பிச்சை அல்ல”:

திருநங்கைகள் என்றால் சாலைகளிலும் இரயில்களிலும் பொதுமக்களிடம் காசு கேட்பவர்கள், பொது மக்களுக்கு தொந்தரவு செய்பவர்கள் என்ற அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் இந்த நங்கைகள். திருநங்கைகள் போராட்டம் குறித்தும் தமிழக அரசுக்கு அவர்களது கோரிக்கைகள் என்ன என்பது குறித்தும் ’இப்போது’ அவர்களிடம் தொடர்புக் கொண்டு கேட்டறிந்தது.

லிவிங் ஸ்மைல் வித்யா:

நாடகத்துறையில் கடந்த பத்து வருடமாக இருந்து வருகிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. மேடை நாடகம் தொடர்பாக லண்டனில் பயிற்சி பெற்றவர்.

”இந்தியாவின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் திருநங்கைகளுக்கு 1% சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கும் பட்சத்தில் அதற்கான கல்வி தகுதி அனைத்து திருநங்கைகளுக்கு உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. பல திருநங்கைகள் தங்களது கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டுள்ளனர். எனவே, ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 100 பேருக்காவது கல்வி சென்றடைய வழி செய்ய வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும்.மேலும் இந்த இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்க வேண்டும். அப்போது தான் வருங்கால தலைமுறைக்காவது பயன்படும்”.

”இரண்டாவதாக, நான்கு வருடங்களுக்கு முன்னர் தண்டையார்பேட்டை பகுதியில் திருநங்கைகளுக்கான வீடு கட்டப்பட்டது. ஆனால், தற்போது அவ்வீடுகளில் திருநங்கைகள் இருக்க கூடாது என்று சொல்லி காலி செய்தனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக்கத்துக்கு, குடிசை மாற்று வாரியத்திற்கு மனு அளித்துள்ளோம். ஆனால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை. திருநங்கைகளுக்கு மாற்று வீடுகள் கட்டி தரப்படவேண்டும்”.

“கண்ணியமாக வாழப்போராடும் நாங்கள், குறைந்தபட்சம் கண்ணியமாக மரணமடையலாம். அது அடுத்த தலைமுறைக்கேனும் உதவட்டும்” என்கிறார், லிவிங் ஸ்மைல் வித்யா.

லிவிங் ஸ்மைல் வித்யா:
லிவிங் ஸ்மைல் வித்யா:

லிவிங் ஸ்மைல் வித்யாவுடன் அவரது போராட்டதில் துனையாய் இருக்கும் அவரது தோழிகள் ஏஞ்சல் கிளாடி முதுகலை இதழியல் பட்டம் பெற்றவர். பானு பொறியியல் பட்டதாரி.

லிவிங் ஸ்மைல் வித்யா,ஏஞ்சல் கிளாடி,பானு.
லிவிங் ஸ்மைல் வித்யா,ஏஞ்சல் கிளாடி,பானு.

பிரித்திகா யாசினி:

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆகும் வாய்பை தவறவிட்டவர் பிரித்திகா யாசினி.
எங்களின் தேவை ஒரு வேலை மற்றும் தங்குவதற்கு வீடு எங்களில் பலர் இன்று படித்து வேலையில்லாமல் உள்ளனர். எனவே தமிழக அரசு எங்களின் போராட்டதை முடக்குவதில் காட்டும் ஆர்வத்தை எங்களது கோரிக்கைகள் என்ன என்பதையாவது கேட்பதற்கு செலுத்த வேண்டும்.
வீடற்ற திருநங்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக மாற்று இடம் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரித்திகா யாசினி
பிரித்திகா யாசினி

இவர்கள் அரசின் தேர்தல் இலவசங்களைக் கேட்கவில்லை. தாங்கள் படித்த படிப்பிற்கான வேலையைப் பெறுவதற்கும், தங்குவதற்கு வீடு வேண்டியும் சாலைகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவது முதன்மையானதாக இருந்தாலும் அவர்களது தேவைகள் என்னவென்று அறியாமல் அடக்குமுறைகளை ஏவுவது, ஒடுக்கப்பட்டவர்கள் மீது அரசு கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்