ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் மோடியின் #சௌகிதார் (காவலாளி) பிரச்சாரம்

0
218
Modi

பிரதமர் மோடி, தன் மீது தீவிர நம்பிக்கை கொண்டிருக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் தேசப் பாதுகாப்பு விசயங்களை மீறி,  புதிய தகவல்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்  #MainBhiChowkidar என்ற பிரச்சாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. 

வங்கி மோசடி செய்தவர்கள் பற்றிய ரகுராம் ராஜனின்  பட்டியல், நீரவ் மோடி விசாரணை , 2ஜி மேல்முறையீடு போன்ற ஊழல் புகார்கள் இன்னமும் இந்தக் காவலாளியின் கவனத்தை ஈர்க்கவில்லை. 

மோடியின் பிரச்சாரத்தை உருவாக்குபவர்கள், அவரைக் காவலாளி எனக் கூறி  மோடியின் புகழை  தூக்கி நிறுத்த முயல்கின்றனர். மோடி அரசும், அவரது அலுவலகமும்  கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் மீது  நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது . இதிலிருந்து  ஊழலுக்கு எதிராக மோடி எப்படி  நடவடிக்கை எடுக்கிறார் என்று புரிந்துக் கொள்ள முடிகிறது 

மோடியை பற்றிய பல்லவியை ஒதுக்கிவிட்டு இந்த உண்மைகளை பார்ப்போம் 

ரிசர்வ் வங்கியின்  முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மோடி பிரதமராகப் பதவி ஏற்ற எட்டு மாதங்களில், வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களின் பட்டியலை அனுப்பிவைத்தார். இந்த வழக்குகளில் பல்வேறு அமைப்புகளின் விசாரணையைக் கோரியதோடு, மற்றவர்கள் இது போல செய்யாமல் இருக்கும் வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.  

காவலாளி மோடி ஊழல் செய்தவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.

அதுதான் இல்லை. சமூக ஆர்வலர் சவுரவ் தாஸ் ஒரு ஆர் டி ஐ மனுவை தாக்கல் செய்தார் . அந்த மனுவில் பிரதமர் அலுவலகம் ரகுராம் ராஜன் அனுப்பிய  பட்டியலை மத்திய நேரடி வருமான வரி வாரியத்துக்கு அனுப்பி வைத்ததா அல்லது  விசாரணைக்கு உத்தரவிட்டதா எனக் கேட்டிருந்தார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பட்டியலும் அனுப்பி வைக்கப்படவில்லை எனப் பிரதமர் அலுவலகத்திடமிருந்து  பதில் வந்துள்ளது.

பிரதமர் அலுவலகம் ரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலையும்  வெளியிடவில்லை மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவலையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இது குறித்து பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு பிரதமர் மோடிக்கு  ஆறு முறை  நினைவூட்டல் அனுப்பியுள்ளது .  

ரகுராம் ராஜன் மதிப்பீட்டுக் குழுவுக்கு பட்டியலை கொடுத்தார், முரளி மனோகர் ஜோஷி தன் அறிக்கையை இறுதி செய்துகொண்டிருக்கிறார்,  பாஜக எம்பிக்கள், குழுவின்  கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவருகின்றனர். குழு அறிக்கையை ஏற்பதற்காக நடக்கும் கூட்டத்தில் போதிய உறுப்பினர் பலம் இல்லாத நிலையை அவர்கள் ஏற்படுத்திவந்தனர். 

மத்திய தகவல் வாரியம் , அமலாக்க இயக்குநரகம் ஆகிய அமைப்புகளில் இருந்து வந்த தகவல்கள்படி பிரதமர் அலுவலகம் ரகுராம் ராஜனின் பட்டியலைப் பகிர்ந்துகொள்ளவோ, எந்தவித நடவடிக்கையையும் கோரவோ இல்லை என செய்தியாளருக்கு தெரிய வந்தது . மோடியின்  குழு இந்த  அறிக்கையின் மீது எப்படிப்பட்ட ஒப்பனையைப் பூசினானாலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ராகுராம் ராஜன் கேட்டுக்கொண்ட பிறகும் மோசடி செய்த கோடீஸ்வரர்கள் மீது  அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை 

பரபரப்பாகப் பேசப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழலைப் பற்றி பேசி  மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரது அரசு இந்த வழக்கை விவரிக்க முடியாத வகையில்  தாமதமாகவும், மோசமாகவும், சிக்கலான முறையிலும் நடத்தியதால் வழக்கு நீதிமன்றத்தில் சரிந்தது.  சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுவித்தார்.

இதனால் மோடியின் ஆதரவாளர்கள் நீதிபதி மீதும் அரசு வழக்கறிஞர் மீதும் பழியை சுமத்தினர் . ஒப்புக்காக சிபிஐ மேல் முறையீடு செய்தாலும், கடந்த ஆண்டு இந்த வழக்கில்  ஒரு விசாரணைகூட நடைபெறவில்லை. எவ்வித எதிர்ப்பையும் காட்டாத   அரசு வழக்கை  தள்ளிப்போடுவதற்கு அனுமதிக்கிறது.

தலைப்புச் செய்திகளில் இந்த ஊழல் குறித்து  பரபரப்பாக பேசப்பட்ட பிறகு, மோடிக்கு இதில் ஆர்வம் குறைந்துவிட்டது. போஃபர்ஸ் வழக்கில் சிலர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானது போல, 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட  சக்தி வாய்ந்த ஒரு நபர் பிரதமருக்கு நெருக்கமானவர். இதை வைத்து அமளி செய்தோம். இப்போது நாடகம் முடிந்துவிட்டது” என மூத்த அமைச்சர் ஒருவர் இந்த செய்தியாளரிடம் கூறினார்.

நீரவ் மோடியைக் கைது செய்வது தொடர்பான இங்கிலாந்தின் தீவிரமான மோசடிகள் தொடர்பான அலுவலகத்தின் (Serious Fraud Office – SFO) கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு அமைதி காத்தது. நகைத் தொழில் அதிபரான நீரவ் மோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தபோது, அவர் கிரிமினல் குற்றம் செய்ததால் கைது செய்ய ஒத்துழைப்பதாக பிரிட்டன் அரசு கூறியது. பிரிட்டன் அதிகாரி, கடந்த அண்டு நீரவ் மோடி லண்டனில் இருந்ததை உறுதி செய்தது. அவரைக் கைது செய்வதற்கான ஆவணங்களைத் தயார் செய்ய அதிகாரிகளை இந்தியா அனுப்புவதாகவும் தெரிவித்தது.

இந்திய அரசு இது பற்றி  மவுனம் காத்தது. இந்தக் கோரிக்கை பிரதமர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குத் தெரிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த செய்திகள்  மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

[இந்தச் செய்தி தி வயர் இதழில் வெளியான நாள் மார்ச், 18, 2019 ; மார்ச் 21, 2019 – பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடி (48), லண்டனில் புதன்கிழமை ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 29-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
]

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணையை துவக்கலாம் என்றிருந்த முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா,  அவர் மோடி அரசால் நள்ளிரவில் மாற்றப்பட்டார். மோடி அரசு, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய அமைப்புகளின் தன்னாட்சியை சிதைத்துவிட்டது . அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கை, மிரட்டல் ஆகியவற்றில்  அனுமதித்தன் மூலம் மோடி அரசு நாட்டின் தன்னாட்சி அமைப்பை சிதைத்துவிட்டது  .

இவை எல்லாம் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. தலைப்புச் செய்திகளை உருவாக்கவும், ஆக்கிரமிக்கவும்  மோடியின் படை கடுமையாக உழைக்கிறது.  ஊழலுக்கு எதிராக மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதுதான் உண்மை . 

https://thewire.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here