மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த ரோஷன் ஜஹான் என்ற மாணவி விபத்து ஒன்றில் 2 கால்களை இழந்தார். ஆனால், மனம் தளராமல் போராடிய ஜஹான் தற்போது எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பை ஜி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் கே.இ.எம். மருத்துவமனையில் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2008-ல் ஜஹான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த  சமயத்தில் ரயிலில் பள்ளி சென்று விட்டு திரும்பி வரும்போது ஓடும் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கிய கால்கள் இரண்டும் துண்டானது. பின்னர் ரெயில்வே போலீசார் உதவியுடன் மருத்துமவனையில் சேர்க்கப்பட்ட ஜஹானுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதன்பின்னர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் ஆளாக்கப்பட்டார் ஜஹான், இந்த நிலையில் தனது விடா முயற்சியால் ப்ள்ளிப் படிப்பை முடித்ததுடன் மருத்துவப் படிப்பையும் முடித்துள்ளார் ரோஷன் ஜஹான்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் ஊனமுற்ற பின்னர் எதாவது சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். படிப்பில் முழு கவனம் செலுத்தி, எனது தேர்வு முழுவதும் சக்கர நாற்காலியில் இருந்து எழுதினேன். 

2011-ல் நான் மருத்துவ கவுன்சிலிங்கிற்காக விண்ணப்பித்தபோது, மாற்றுத் திறனாளிகளின் ஊன சதவீதம் 40-70 வரைதான் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் நான்  89 சதவீதம் பாதிக்கப்பட்டேன். இதனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து நான் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கு தலைமை நீதிபதி மோஹித் சாந்திலால் ஷா, எனது உறுதியையும், மருத்துவப் படிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதலையும் உணர்ந்து நான் மருத்துவப் படிப்பில் சேரவதற்கு உத்தரவு பிறப்பித்தார். காங்கிரஸின் அமீன் படேல் எனது பட்டப்படிப்பிற்கான  செலவை ஏற்றுக்கொண்டார். மருத்துவப் படிப்பில் நான் மகாராஷ்டிராவிலேயே நான் 3-வது இடத்தை பிடித்தேன்.’ என்று கூறினார். 

ஜஹானுக்கு சமீபத்தில் அவரது இடுப்பெலும்பில் (sacrum bone) கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் அவர் இரண்டு மாதங்கள் படுக்கையில் இருந்தே  அனைத்து சோதனைகளையும் எதிர்த்துப் போராடினார், தற்போது அவர் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறார்.

சாதிப்பதற்கு உடல் ஊனம் தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் மாணவி ரோஷன் ஜஹான். இதில் குறிப்பிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளான அவரது இடைவிடாத முயற்சி, பொறுமை ஆகியவை அவருக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது. 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here