ஊடக ஒற்றுமைக்காகவும் உரிமைக்காகவும் உயர்ந்த என்.ராமின் குரல்

A cross-media advocacy and action group "Alliance for Media Freedom" is formed to defend media freedom in the state of Tamil Nadu.

0
163

தமிழ்நாட்டுச் செய்தியாளர்களும் ஊடகங்களும் ஒன்றிணைந்து கருத்துரிமையைக் காக்க வேண்டிய நேரம் இது; கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கைது தொடங்கி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களின் மீதும் ஊடக நிறுவனங்களின் மீதும் அச்சுறுத்தும் தன்மையுடன் கூடிய அரச நடவடிக்கைகள் தொடர்கின்றன; இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக “தி ஹிந்து” வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் தலைமையில் ”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று சென்னையிலுள்ள காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி கல்லூரியில் தொடங்கப்பட்டது; 139 வருட வரலாறு கொண்ட “தி ஹிந்து” குழுமத்தின் தலைவரும் உலகறிந்த பத்திரிகையாளருமான என்.ராம் தலைமையேற்று நடத்திய ”ஊடக கலந்தாய்வு: உரிமைகளும் பொறுப்புகளும்” என்கிற கலந்தாலோசனையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், ஃபவுண்டேஷன் ஃபார் மீடியா புரஃபஷனல்ஸ், நெட்வொர்க் ஆஃப் விமன் இன் மீடியா ஆகிய அமைப்புகளின் ஆதரவு பெற்ற கூட்டணி இது.

மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகர் சவும்யா அன்புமணி, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாளர் ஃப்ளாரன்ட் ஃபெரைரா, சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஐசக், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், டைம்ஸ் ஆம் இந்தியா நாளிதழ் சென்னைப் பதிப்பின் ஆசிரியர் அருண் ராம், சத்தியம் தொலைக்காட்சியின் பொது மேலாளர் சாமிநாதன், “தி ஹிந்து” நாளிதழின் வெளியீட்டாளர் என்.ரவி, காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்லூரியின் பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் ஆகியோர் கலந்தாய்வில் பேசினார்கள்; ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் அமைப்பாளராக இப்போது டாட் காமின் நிறுவனர் பீர் முகமது செயல்படுவார். இந்தக் கலந்தாய்வின் தீர்மானங்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் இணைச் செயலாளர் ஹசீஃப் முகமது வாசித்தார். நெட்வொர்க் ஆஃப் விமன் இன் மீடியாவைச் சேர்ந்த கவிதா முரளிதரன் தீர்மானங்களை வரவேற்று பேசினார். மூத்த பத்திரிகையாளர்கள் ஜவஹர், தீக்கதிர் குமரேசன், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், மின்னம்பலம் காமராஜ், மயிலை பாலு, தமிழ்க்கனல் உள்ளிட்டோர் கலந்தாய்வில் பங்கேற்றார்கள். இந்தக் கலந்தாய்வில் வெளிடப்பட்ட அறிக்கையும் தீர்மானங்களும் இங்கே இடம்பெறுகின்றன.

தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்

செய்தி ஊடகங்களைப் பற்றிய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அணுகுமுறை பெருமளவுக்குத் தரம் தாழ்ந்துள்ளது; செய்தி ஊடகங்களிடம் அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான செய்திகளை முறைப்படி சட்டப்பூர்வமான வழிகளில் கொண்டு சேர்க்கிற பத்திரிகையாளர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குகளைத் தொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மக்களின் போராட்டங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் செய்தி சேனல்களுக்கு எதிராக வாய்மொழி எச்சரிக்கைகள் அரசிடமிருந்து வருகின்றன; தொலைக்காட்சி விவாதங்களில் அரசுக்கு விமர்சனபூர்வமான குரல்கள் பங்கேற்பதும் இந்த முறையில் தடுக்கப்படுகிறது. இதுபோன்ற எச்சரிக்கைகளைப் புறக்கணித்தால் கடும் விளைவுகள் ஏற்படுமென்று அச்சுறுத்துவது அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரானது. தமிழக அரசு அதன் தொலைக்காட்சி விநியோக வலைப்பின்னலான அரசு கேபிளைப் பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை, இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை, அரசுக்கு மாற்றான கருத்துக்களை ஒளிபரப்பிய “குற்றத்திற்காக” ஊடகங்களைத் ”தண்டித்து” வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் சுதந்திரமாக தகவல்கள் மக்களுக்குப் பரவுவதைத் தடுக்கின்றன; ஊடகங்களிடையே அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன; வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்குகின்றன.

“புதிய தலைமுறை” மீதான நடவடிக்கைகளை இதற்கு ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த சேனல் நடத்திய ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசிய கருத்துக்களுக்காக இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 153A மற்றும் 505 பிரிவுகளின் கீழும் பொதுச் சொத்துக்குச் சேதாரம் தொடர்பான மாநிலச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள் டிவியில் 124-வது இடத்திலிருந்த “புதிய தலைமுறை” தொலைக்காட்சியை 499-வது இடத்துக்கு அவர்கள் மாற்றியிருக்கின்றனர். மேலும், தமிழ் சார்ந்த சேனல்களிருந்து மாற்றி, பிற மொழி சேனல்கள் இருக்கும் இடத்தில் இடம்பெறச் செய்துள்ளனர். இது தனித்த நிகழ்வு அல்ல. தந்தி டிவி, நியூஸ் 7, மக்கள் டிவி, சத்தியம் டிவி, சன் நியூஸ், ஜெயா நியூஸ், நியூஸ் 18 தமிழ்நாடு, கேப்டன் டிவி, கலைஞர் செய்திகள், காவேரி நியூஸ் உள்பட பல செய்தி சேனல்களும் அரசு கேபிளிலிருந்து தொழில்நுட்ப “இடர்ப்பாடு” மூலமாகவோ, நேரடியாகவோ ஒரு நாள் முதல் சில மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

தமிழ்நாட்டின் ஊடகவியலாளர்களான நாங்கள் பல செய்தி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். மாநில அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோதமான நடவடிக்கைகளை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக தொலைக்காட்சி கேபிள் சேனல்களைத் தணிக்கை செய்வதற்கு அரசின் கேபிள் விநியோக நிறுவனத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; உடனடியாக செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்ப பெற வேண்டுமென்று தமிழக அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையற்ற சூழலை உருவாக்குவதற்காக முன்வைக்கப்படும் ஒருங்கிணைந்த வேண்டுகோளாகும்.

அச்சு, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் செயல்படும் பத்திரிகை நிறுவனங்களும் அவற்றில் பணிபுரியும் செய்தியாளர்களும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திர நெறிமுறைகளின்படி தங்கள் வேலையை சுதந்திரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செய்வதற்கான ஒரு சூழலை முற்போக்கு மாநிலமான தமிழகத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

தீர்மானங்கள்

1.பத்திரிகையாளர்களும் ஊடகங்களில் முன்னணிப் பங்கு வகிப்பவர்களும் கையெழுத்திட்டுள்ள “தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்” என்ற அறிக்கையை இந்தக் கலந்தாய்வு தீர்மானமாக நிறைவேற்றுகிறது.

2.தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதைப் பற்றிய கவலையைப் பதிவு செய்யவும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தவும் தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம் தலைமையிலான ஊடகக் குழுவினர் தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமியை சந்திப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3.இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை செய்தி தொலைக்காட்சிகளின் முன்னணி அமைப்பான தேசிய ஒளிபரப்பாளர்களின் அமைப்புக்கு வலியறுத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

4.இந்தப் பிரச்சினைகளை நாடு முழுவதுமுள்ள செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ள எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

5.தமிழ் செய்தி சேனல்கள் எதிர்கொள்ளும் சவால்களை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

4.”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” என்ற பெயரில் பல செய்தி ஊடகங்களும் செய்தியாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்த வாதாடும் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; இந்த அமைப்பு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கண்காணித்து ஊடக சுதந்திரத்தையும் தன்னாட்சியையும் பேணிப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான, ஜனநாயக வழிமுறைகளைக் கடைபிடிக்கும்.

மக்கள் முதல்வர்

ஜெயலலிதாவின் மூன்று மந்திரங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here