எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பெண்கள் சாதிக்க வேண்டும் என்றால், ஆண்களை காட்டிலும் சற்று தீவிரமாக இருக்க வேண்டியிருக்கும். பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதிகமே. பல இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தாக்குதல்களை எல்லாம் தாண்டிதான் வேலை செய்ய வேண்டியுள்ளது. இதில் ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல.

பல நிகழ்வுகளை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டினாலும், இங்கும் சில கறுப்புப் பக்கங்கள் இருக்கின்றன. பெண் செய்தியாளர்கள் சிலமுறை இதுகுறித்து புகார் அளித்திருந்து செய்திகளும் வெளியாகியுள்ளன.

தற்போது, ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் சமூக ஊடகங்களில் இதுகுறித்து தீவிரமாக பேசி வருகின்றனர். பல பிரபல பத்திரிகையாளர்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் குறித்து ட்விட்டரில் வெளிப்படையாக ட்வீட் செய்துள்ளனர்.

இது இந்தியாவின் #MeToo இயக்கமாக பார்க்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர்.

தற்போது ஊடகத்தில் இருக்கும் பெண்கள், இது தொடர்பாக ட்வீட் செய்ததில், சில ஆண்கள் தங்களுக்கு தவறான விதத்தில் அனுப்பிய செய்திகளையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளனர்.

பெண் பத்திரிகையாளரான சந்தியா மேனன், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹைத்திராபாத் பதிப்பின் ஆசிரியரான ஸ்ரீனிவாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள பதிலில், பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி நடத்திவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பெண்கள் இவ்வாறு முன்வந்து தைரியமாக புகார் அளிப்பது பாராட்டுக்குரியது என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்துள்ளார். “ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது தைரியமான ஒன்று. இது தொடர்பான வழக்குகளில் போராடும் அனைவருக்கும் என் ஆதரவு இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல ஹஃபிங்ட்ன் போஸ்டில் பணிபுரிந்த அனுராக் வர்மா மீதும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அவர் ஸ்னாப்சாட்டில் தவறான விதத்தில் மெசேஜ்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள அனுராக் வர்மா, தான் விளையாட்டாகவே அந்த மெசேஜ்களை அனுப்பியதாக கூறியுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஹஃபிங்ட்ன் போஸ்ட், பாலியர் புகாருக்கு ஆளாகியுள்ள அனுராக் வர்மா மற்றும் உத்ஸவ் சக்ரபர்தி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் என்றும், தற்போது அந்நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.

‘ஊடகத்துறையில் நடக்கும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்ட தவறிவிட்டோம்’

சமூக ஊடகங்களில் பெண் செய்தியாளர்கள் வெளியிடும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் பேசிய பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், “இதனை வெளிப்படையாக கூறுவதில் இருந்து நம் பணியிடத்தில் பாதுகாப்பு இல்லை என்று தெளிவாக தெரிய வருகிறது” என்றார்.

இத்தனை வருடங்களாக பெண் செய்தியாளர்கள் நாங்கள் எங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அனுபவித்த தொல்லைகளை நாங்களே பகிர்ந்து கொள்வோம். தற்போது, பலரும் வெளிப்படையாக பேசுவது பல மாற்றங்களை உருவாக்கும். உருவாக்க வேண்டும். ஊடகங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். இதை விட முக்கிய இதற்கு எப்படி தீர்வு காணப் போகிறோம் என்பது.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளது. அலுவலகங்களுக்கு உள்ளேயும் வெளியேவும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஊடக நிறுவனங்கள் ஊருவாக்க வேண்டும். இதுகுறித்து பேசுவது மிகவும் முக்கியமாகும்.

இந்தியாவில் செய்தியாளர்களான நாம், பிறருக்கு ஏற்படும் பிரச்சனைகள், அரசியல் என பல்வேறு விவகாரங்களை செய்திகளாக வழங்குகிறோம். ஆனால் நம் துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டோம்.

எத்தனை ஊடக நிறுவனங்களில் விசாகா விதிமுறைகள்படி, பணியிடத்தில் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. அப்படி குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையான செயல்பாட்டில் உள்ளதா என்பதும் நமக்கு தெரியாது.

இதற்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா என்று கேட்டால், ஊடகத்துறைகளில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும். பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் இன்றும் ஆண்கள்தான் பெரும்பாலும் ஆசிரியர் பதவி வகிக்கிறார்கள். ஆண்களுக்கு எதிராக இங்கு கருத்துகூறவில்லை. பெண்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

இவ்வாறு தன்யா ராஜேந்திரன் தெரிவித்தார்.

#MeToo என்றால் என்ன?

ஆண்களால் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்னும் ஹாஷ்டேகை பதிவிட்டும், அதனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தார்கள். 2017ஆம் ஆண்டு இந்த ஹாஷ்டேக் மிகவும் வைரலானது.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்கள் குரல்கொடுக்கும் பிரச்சாரமாக அது மாறியது.

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ட்விட்டரில் #MeToo ஹேஷ்டாக் பயன்படுத்தி ட்வீட் செய்தததையடுத்து இது பிரபலமாகியது. அதனை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் இதனை பயன்படுத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.

Courtesy : BBC Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here