ஊடகங்களிடம் பேசும் மக்களை இரவு நேரங்களில் மிரட்டும் தூத்துக்குடி போலீஸார்

0
676

தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-ஆவது நாள் (மே 22 ஆம் தேதி) போராட்டத்தின்போது மக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகும், தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடித்து வருகிறது.

கலவரத்தில் ஈடுபட்டதாகவும், கலவரத்திற்கு கரணமாக இருந்ததாகவும், சட்டத்திற்கு புறம்பாக அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 248 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தூத்துக்குடி மக்கள் தெரிவிக்கிறார்கள் .

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேராடியதாக , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதனை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

போராட்டம் நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இன்றும் தூத்துக்குடி மக்களிடம் அச்ச உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

1

குமரட்டியபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், அண்ணாநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்தனர். இரவில் போலீஸார் பொதுமக்களின் வீடுகளில் கதவைத் தட்டி வீட்டில் உள்ள ஆண்களை கைது செய்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் மடத்தூர் கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஊர் நடுவே உள்ள கோயிலில் இரவு நேரங்களில் தங்கியிருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் நாங்கள் பார்க்கும் முதல் விஷயம் எங்கள் வீட்டு ஆண்கள் திரும்பி வந்துவிட்டார்களா? என்று தேடி வரும் போலீஸ்காரர்களைத்தான் என்று கிராம பெண்கள் கூறுகிறார்கள்

ஊடகங்களிடம் பேசும் மக்களை இரவு நேரங்களில் போலீஸார் வீடுகளில் வந்து மிரட்டுகிறார்கள். ஊடகங்களை சந்திக்கக் கூடாது எனவும் எச்சரித்து வருகிறார்கள். இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் எங்களால் ஊடங்களிடம் சுதந்திரமாக பேச முடியவில்லை என்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கூறுகிறார்கள் .

போலீஸாரின் அத்து மீறலால் பல ஆண்கள் ஊரை விட்டுச் சென்று வெளிமாவட்டங்களில் தலைமறைவாக வாழ்வதாக தூத்துக்குடி மக்கள் கூறுகிறார்கள். அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் கைது , போரட்டம் நடத்தினால் கைது போன்ற செயல்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக தெரிகிறது .

ஊடகத்திடம் பேசிய வழக்கறிஞர் சுமித்ரா ” பெண்களுக்கு தூத்துக்குடியில் பாதுகாப்பு இல்லை. பொதுமக்களை இரவில்
வீடுகளுக்குள் புகுந்து போலீஸார் மிரட்டுகிறார்கள் .

தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று அரசு தரப்பில் சொல்வது பொய். உண்மையைச் சொன்னால் இன்றும் தூத்துக்குடி இயல்பு நிலைக்கு திரும்பாமல்தான் உள்ளது. போரட்டத்தில் கலந்து கொள்ளாத சிறுவர்களைக் கூட விசாரணை என்ற பெயரில் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

சிறுவர்கள், ஆண்கள், போராட்டக்காரர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறியுள்ளார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here