புலம்பெயர் தொழிலாளர்களை பணியமர்த்தும் மாநிலங்கள் அதற்காக அனுமதி பெற வேண்டும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பல லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள், பஸ்கள், லாரி, வேன், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு வகைகளில் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இவற்றில் இடம் கிடைக்காத அல்லது பணம் இல்லாதவர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மேலும், இவர்கள் தண்டவாளங்கள், சாலைகளில் நடந்து செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் விபத்துகள் ஏற்பட்டு, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாட்டின் முதுகெலும்பை போன்றவர்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கு காலத்தில் சரியாக நடத்தவில்லை. அவர்கள், எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய தொழிலாளர்களுக்கு உத்தரபிரதேசத்திலேயே வேலை வழங்க புலம் பெயர் தொழிலாளர் ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதற்காக மாநிலம் திரும்பிய தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனைபோல்,  உ.பி.,யை சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், எங்களிடம் அனுமதி பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பும், காப்பீடும் வழங்குவதாக உறுதியளிக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பது, மாநில அரசின் கடமை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் பற்றி ஆணையம் தெரிவிக்கும் என்றார்.

இதுவரை, 23 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர். இதில் மும்பையிலிருந்து மாநிலம் திரும்பிய 75% பேருக்கும், புதுடெல்லியிலிருந்து திரும்பிய, 50% பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here