உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப்பை தவிர்த்து மற்ற மாநிலங்களில் எல்லாம் பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி நடத்திவருகிறது.

இந்த ஏழு மாநிலங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களைக் கைப்பற்றி அசுர வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. 

அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடந்தாண்டு வரை பெரியளவில் அதிருப்திகள் இல்லாமல் இருந்தது. இருப்பினும், கரோனா 2ஆம் அலையை அம்மாநிலம் மோசமாகக் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை பாஜக எடுக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு மத்தியில், உத்தரப் பிரதேசத்தில் மற்ற எதிர்க்கட்சிகளும் தங்கள் பரப்புரைகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஜான்சி நகரில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பேரணியில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “மேற்கு வங்கத்தில் பாஜகவை மம்தா படுதோல்வி அடையச் செய்தார். 

அதேபோல உத்தரப் பிரதேச மக்களும் பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்வார்கள். வரும் காலத்தில் மம்தா முன்னெடுக்கும் மாற்று அணியில் நாங்கள் சேர வாய்ப்புள்ளது. சரியான நேரம் வரும் போது அவர்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ்) பேச்சுவார்த்தை நடத்துவோம். 

உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பூர்வாஞ்சலில் விரைவுச்சாலையை திறந்து வைத்தார். ஆனால், இது எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். அதை எதோ பாஜக செய்தது போலக் கூறுகிறார்கள். எங்கள் ஆட்சியில் வெறும் 22 மாதங்களில் விரைவுச் சாலையை அமைத்தோம். ஆனால் பாஜக அதே வேலையை 4.5 ஆண்டுகளில் செய்துள்ளது. அவர்களுக்கு மக்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை. அதைத்தான் இது காட்டுகிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சி குறித்துப் பேசிய அகிலேஷ், “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். வரும் தேர்தலில் அவர்கள் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது” என்றார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள இதர பிராந்தியக் கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டுள்ளார். அதேபோல, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் ஆதரவையும் பெற அவர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here