உஷார்: கொரியரில் அனுப்பும் செக்கைத் திருடும் கும்பல்

0
1267

(ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது)

கொரியரில் அனுப்பப்படும் கிரெடிட் கார்டுகளைத் திருடும் கும்பலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை மிஞ்சுகிற மோசடிக் கும்பல் இப்போது கொரியரில் அனுப்பப்படும் வங்கி செக்குகளைத் திருடுகிறது. தி.நகர் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ஜூன் 11 ஆம் தேதியன்று தங்களுக்கு துணிகள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு 17067 ரூபாய்க்கான செக்கை புரஃபஷனல் கொரியர் மூலமாக அனுப்பியது; இந்தச் செக்கை கொரியர் பையனிடமிருந்து மோசடிக் கும்பல் திருடிவிட்டது; ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி செக்கைத் திருத்தி தொகையை ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் என்று மாற்றியுள்ளது மோசடிக் கும்பல்; மோசடிக் கும்பலைச் சேர்ந்த கிரண் என்பவர் ஜூன் 16 ஆம் தேதியன்று தி.நகர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இந்தச் செக்கைக் கவுண்டரில் கொடுத்து பணம் வாங்க வந்தார். இதைப்போல கொரியரில் செக் அனுப்பி பல லட்சங்களைப் பறிகொடுத்த மக்களின் புகார்களால் உஷாராகியிருந்த புரஃபஷனல் கொரியர் நிறுவனம் வங்கிக்கு எச்சரிக்கை அனுப்பியிருந்தது; கிரணிடம் செக்கை வாங்கி விட்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்தது வங்கி நிர்வாகம். நிலைமை விபரீதமாவதைப் புரிந்துகொண்ட கிரண் போலீஸ் வருவதற்குள் தப்பியோடி விட்டார்.

இதுபோன்ற மோசடிகள் சென்னை, திருப்பூர், பெங்களூரு, டெல்லியில் நடந்துள்ளன; இவை குறித்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டு செயல்படும் குற்றக் கும்பல்கள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. திருடப்பட்ட செக்குகள் வங்கிகளில் கவுண்டர்களில் மாற்றப்படுவதால் சிசிடிவி வசதிகளைத் துல்லியமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் செக்கிற்குப் பணம் வழங்குவதில் கவனமாக இருக்கும்படியும் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் மாவட்டத்திலுள்ள எல்லா வங்கிக் கிளைகளுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளார். கொரியர் வினியோகம் செய்வோர் தங்களுடைய பார்சல் பைகளை வண்டியில் விட்டுவிடாமல் எப்போதும் கைகளில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. “தினசரி எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் செய்திகள் மூலம் கொரியர் பணியாளர்கள் தங்களது பைகளை வண்டிகளில் விட்டுச் செல்லாதிருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது” என்கிறார் புரஃபஷனல் கொரியரின் கனி.

செக்குகளை அனுப்பும்போது பெயரின் மீதும் தொகையின் மீதும் வெள்ளை செல்லோடேப் ஒட்டுவதை ரிசர்வ் வங்கியின் விதிகள் அனுமதிக்கின்றன. இப்படிச் செய்தாலும்கூட ரசாயன உதவியுடன் மோசடிக்கும்பல் கைவரிசையைக் காட்ட வாய்ப்பிருக்கிறது என்பதையே பெருகிவரும் மோசடிகள் நமக்கு உணர்த்துகின்றன; ”இதைத் தடுப்பதற்கு அறிவியல்பூர்வமான வழிகளை ரிசர்வ் வங்கி ஆராய வேண்டும்; மின்னணு கருவி மூலம் செக் தாள் ரசாயனத்துக்கு ஆட்பட்டுள்ளதா என்பதை அறிவதுதான் தீர்வாக இருக்கும்” என்கிறார் புரஃபஷனல் கொரியர் நிறுவனர் அகமது மீரான். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வங்கி மோசடியாக மாற்றப்பட்ட செக்கிற்குப் பணம் வழங்கியது போலீஸ் விசாரணையில் உறுதியானால், பணத்தை இழந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அந்தத் தொகையைத் திரும்ப வழங்கும் பொறுப்பு வங்கிக்கு உண்டு; இந்த அடிப்படையில் மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில வங்கிகள் தொகையினைத் திரும்ப வழங்கியுள்ளன.

”ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படியே டிரான்ஸ்பேரண்ட் செல்லோடேப்பை அக்கவுண்ட் பேயீ, பெறுபவரது பெயர், தொகை ஆகியவற்றின் மீது ஒட்டிவிடுவது மிகவும் நல்லது; வங்கி கவுண்டரில் செக்கிற்குப் பணம் கேட்கப்படும்போது தீவிரமாகப் பரிசீலித்துக் கொடுப்பதற்கு நேரம் இருக்காது. எனவே ரசாயனத்தாலோ, பிற வழிகளிலோ திருத்தப்பட்ட செக்குகளை உடனடியாகக் கண்டறியும் மோசடிக் கண்டுபிடிப்புக் கருவியை உண்டாக்க வேண்டும்” என்கிறார் பிரபல ஆடிட்டர் ஜான் மோரிஸ்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்