உள்ளாடைகளைத் துவைக்க சொன்ன நீதிபதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சார்பு நீதிமன்றத்தில் அரசு பணியில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த உதவியாளரை நீதிபதியின் வீட்டு வேலைகளைச் செய்யுமாறு பணித்தது முறையற்ற செயல் என்றும், அதிலும் நீதிபதியின் வீட்டுத் துணிகளைத் துவைக்க வைத்ததும், உள்ளாடைகளை துவைக்க மறுத்தார் என்று மிரட்டல் குறிப்பாணை அனுப்பியதும் மன்னிக்க முடியாத குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம், வள்ளியூர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் வேல்முருகன் என்பவர், மீன்கறி சமைக்கவில்லை என்பதற்காக நவம்பர் 21, 2012 இல் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் என்ற தகவலையும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதித்துறையின் மாண்பையும், மதிப்பையும் காப்பாற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தாமாகவே முன்வந்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : உள்ளாடைகளைத் துவைக்காததற்கு நோட்டீஸ் அனுப்பிய சத்தியமங்கலம் நீதிபதி

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நீதித்துறையின் கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள சத்தியமங்கலம் சார்பு நீதிபதி செல்வம் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும், நீதித்துறை மட்டுமின்றி, காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளிலும் இத்தகைய கொடுமைகள் நடப்பதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்