உளவு காத்த கிளி – 8

Spy Thriller Fiction: Adventures of Secret Agent Vikram

0
601
உளவாளி விக்ரமின் சாகசங்கள் தொடர்கின்றன

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

பிப்ரவரி 13 2009

காலை மணி 8-10க்கு என்னைச் சந்திக்க வேண்டிய ஆள் ரயில் நிலையத்தில் நுழைந்தான். தலை மீது சுழலும் சிகப்பு விளக்கு மாட்டாத குறையாக, ஒரு அமெச்சூர் ஒற்றன் செய்யும் அத்தனைத் தவறுகளையும் செய்தான்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆள், ரேமண்ட்ஸ் ரக கறுப்பு நிறத்தில் கால் குழாய்களையும், அதே கலரில் க்ரொகொடைல் டீ ஷர்டும் அணிந்திருந்தான். சற்றே வழுக்கை விழுந்த உருண்டைத் தலை. முகத்தில் முடியே இல்லை.

மணி 8-30ஐத் தாண்டியவுடன் டென்ஷன் ஆனான். மணிக்கட்டில் கட்டியிருந்த சீனாவில் தயாரித்த டூப்ளிகேட் டிஸ்ஸோ கடிகாரத்தை அடிக்கடி பார்த்தான். பெருமூச்சுகளை விட ஆரம்பித்தான். அவனிடமிருந்து சுமார் 10-15 அடி தூரத்தில் நின்று அவனை மானசீகமாக ஸ்கேன் செய்தேன். ஒற்றன் பணிக்குப் புதிதாக வந்த கத்துக்குட்டி என்பது தெளிவாகத் தெரிந்தது. எனது சகாக்களுள் ஒருவரிடம் விசேஷ ஸ்கேனர் இருந்தது. அதன் உதவியுடன் அவனிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை அறிந்தோம்.

மணி 9-10க்கு கெட்ட வார்த்தைகளை முணுமுணுத்து நடை பாலம் மீது ஏற அவன் எத்தனித்தபோது அவனைக் கேஷுவலாக அணுகினேன்.

துப்பறியும் ஏஜென்ட் விக்ரமின் அசாதாரண சாதனைகள்
துப்பறியும் ஏஜென்ட் விக்ரமின் அசாதாரண சாதனைகள்

“மிஸ்டர் வ்யாக்ரபாத ரெட்டி?”

திடீரென நான் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான்.

“ஓம்…அவனு!”

சந்தேகமே இல்லை, இவனுக்குத் தெலுங்கின் “தெ” கூடத் தெரியாது.

“நேனு விக்ரம் ராவ். ஏமி மெஸேஜு?”

“யூ கெனாட் பீ விக்ரம் ராவ். ஹி இஸ் சப்போஸ்டு டு பீ…”

“நீங்கள் யாழ்ப்பணத்தவர் எண்டு வடிவாக விளங்கிட்டு. கதைக்கும் முறையிலிருந்து, வல்வெட்டித் துறைப் பக்கமண்டு சொல்லலாம். உங்க மெஸேஜ் என்னவெண்டு கதைத்தால், வடிவாகச் செயலில் இறங்கலாம், என்ன?” என்றேன். எனது வார்த்தைகள் சிலருக்குக் காமெடியாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு அது சிம்ம சொப்பனம்.

“உங்களை எனக்கு அடையாளமே தெரிய இல்ல. கன நேரமா என்ட பக்கத்துலதான்…”

“வை டோண்ட் வி மூவ் ஸம்வேர் எல்ஸ்?”

வேறிடம் செல்லும் எண்ணத்தை வெளிப்படுத்திய நான், அவனது விடைக்குக் காத்திராமல், நடக்கலானேன்.

ரயிலடிக்கு வெளியே ஒரு டீக்கடையில், தம் பற்றவைத்து, அவன் சொல்வதைக் கேட்டேன்.

“வனிதா எங்கட இயக்கத்தைச் சேர்ந்தவர்,” என்று ஆரம்பித்தான்.

‘ஒரு சிறு தவறினால் அவள் சிறை செல்ல வேண்டியதாயிற்று,’ என்றான். இந்தியாவின் ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானில் தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டு இங்கு வினியோகம் ஆகிறது என்றான். அதில் அவனது இயக்கத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டிருப்பதையும், அவர்களது விலாசங்கள் தன்னிடமிருப்பதையும் கூறினான். நான் புருவங்களை நெரித்தேன். அதே கும்பலின் ஆட்கள், சிவகாசியில் இந்திய ரூபாய் நோட்டுகளை விட மிகவும் கைதேர்ந்த முறையில் அமெரிக்க டாலர்களை அடித்து வினியோகிக்கிறார்கள் என்றான். அந்தப் பொருளாதார நாசவேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் விரைவில் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வது போலப் பாசாங்கு செய்து இந்தியாவின் பெயரை ரிப்பேர் ஆக்க இலங்கைத் தமிழர்களையும், அவர்களுடன் சில இந்தியர்களையும் சிக்க வைக்கும் திட்டம், பாகிஸ்தானின் ராணுவத் தலமைபீடமான ராவல்பிண்டியில் தீட்டப்பட்ட விவரங்களை உமிழ்ந்தான். சிவகாசி அச்சகத்தின் விலாசத்தையும் கொடுத்தான். புலிகளை “கர்ணல்” கருணா மொத்தமாகக் காட்டிக் கொடுத்ததால், தமிழீழ சுதந்திரப் போருக்குப் பின்னடைவு ஏற்பட்டது, என்றான். பிரபாகரன் தப்பித்துச் சென்றுவிட்ட உண்மையை இலங்கைப் போர் தளபதி சரத் ஃபோன்ஸெக்காவே ஜனவரி 18, 2009 அன்று கொழும்பில் உளறிவிட்டதாகச் சொன்னான். விரைவில் அவர் பெரும் சிக்கலில் மாட்டவிருப்பதாக ஆரூடமும் வேறு தெரியப்படுத்தினான்.

பத்து நிமிடங்களுள் இவனிடம் இனி ஒரு குந்துமணி அளவு முக்கியத் தகவலும் எஞ்சி இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.

“வனிதாங்கற யார்கிட்டேர்ந்தோ ஸின்ஹான்னு யாருக்கோ ஒரு மெஸேஜ் இருக்கறதா உங்க ஆள் ஒருத்தன் சொன்னானே…”

“அதை வனிதாதான் விளக்க இயலும். அவங்களை நீங்கள் நினைத்தால் வடிவா விடுவிக்க இயலும் எண்டு எனக்குத் தகவல் அனுப்பினவர் சொன்னார். ஆனபடியால்…அவரை விடுதலை செய்ய…”

இவனிடம் பேசிப் பயனில்லை என உணர்ந்த நான், அருகிலிருந்த கடையிலிருந்து சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லி நகர்ந்தேன். கண் இமைக்கும் நேரத்திற்குள் அவனை எனது சகாக்கள் குண்டுக்கட்டாக – தயார் நிலையிலிருந்த கவச வண்டியில் தூக்கிப்போட்டுச் சென்று விட்டார்கள். அந்த நிகழ்வுக் கோர்வைக்கு சரியாக இரண்டரை செகண்டுகள்தான் பிடித்தன. பெரிதாக யாரும் கவனிக்கவில்லை.

எதுவுமே நடவாததுபோல சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்து, ஒரு ஆட்டோவில் ஏறினேன்.

திருப்பதியில் இந்த ஆப்பரேஷனுக்காகவே ஒரு ஃப்ளாட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம்.

அங்கு செல்கையில் எவரும் என்னைப் பின் தொடராத வண்ணம் திடீரென நான் பயணித்த வண்டி நகர்ந்தவுடன் ஒரு சிறு ட்ராஃபிக் ஜாமை எனது வேறு சில சகாக்கள் உருவாக்கினர்.

எங்கோ இந்தச் சம்பவங்களில் ஒரு அழுகிய மீன் வாடை அடிப்பதை உணர்ந்தேன். ஆனால் அதன் சூட்சுமத்தை என்னால் அப்போதைக்கு கணிக்க இயலவில்லை.

கீழ்த் திருப்பதி ஃப்ளாட்டினுள் பிரவேசித்தேன்.

அவசரமாக ஸின்ஹாவுக்குப் ஃபோன் பண்ணினேன்.

“குட் வர்க், மை பாய்!”

“இதுல எங்கேயோ, ஏதோ நாறுது சார். ஸம்திங் ஈஸ் நாட் ரைட்.”

“அந்த ஃபீலிங் எனக்கு இருக்கு.”

“அந்தப் பொண்ணை…”

“ரிலீஸ் பண்ண ஏற்பாடு ஆயிரிச்சி. அது நாளைக்கு நடக்கும். அதுக்குள்ள சிவகாசியில ஆகவேண்டியதைச் செய்ய நீயே உன்னோட சென்னை காண்டாக்ட்ஸுக்குச் சொல்லி…”

“அடுத்த வேலை அதுதான்.”

பத்து நிமிடம் இளஞ்சூடுள்ள ஷவரில் அழுக்கைக் களைந்து குளித்தேன். அறையில் எனக்கான உடை தயாராக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. ஃப்ரெஷ் ஆ மாறினேன்.

தமிழகக் காவல்துறையின் ஸி பி ஸி ஐ டி பிரிவில் ஐ ஜி ராங்கில் பணிபுரியும் ஹிருதயதாஸ் தேவசகாயம் எனது ஆப்த நண்பர்களுள் ஒருவர்.

அவரைத் தொடர்பு கொண்டேன்.

“சிவகாசியில ஒரு பயங்கர கான்ஸ்பிரஸி அன்ட் க்ரைம்,” என்று ஆரம்பித்தேன். நான்கு நிமிடங்களுள் விஷயத்தைச் சுருக்கமாக, ஆனால் தெளிவாக விளக்கினேன்.

“ரெய்டு ஸீக்ரெட்டா, இல்லை…”

“பகிரங்கமாச் செய்யுங்க. ப்ரெஸ்ல இஷ்டத்துக்கு கதை விடவும் ஏற்பாடு பண்ணினா நல்லா இருக்கும்.”

“ஏன்?”

“நமக்குப் பாகிஸ்தான் ஆப்பு வெக்கறதா இருந்தாங்க. நாம பதிலுக்கு வெப்போமே!”

“ஸவுண்ட்ஸ் குட்!”

“ஹேப்பி ஹண்டிங்!”

தொடர்பைத் துண்டித்தேன்.

மீண்டுமொரு முறை ரேணிகுண்டா விமான நிலையம் சென்று, சென்னைக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் கிளம்பவிருந்த ஃப்ளைட்டுக்காகக் காத்திருக்கையில், தொலைக்காட்சிகளில் சிவகாசி ரெய்டுகள் செய்தியானதைக் கண்டேன்.

சேவற்கொடியோன் என்ற ஒரு டி எஸ் பி – பல மாதங்களாகக் கள்ள நோட்டுக் கும்பலைக் கவனித்து, தக்க நேரத்தில் பிடித்ததாகக் கரடிவிட்டதைக் கேட்டேன். எனக்குச் சிரிப்பு வந்தது.

இரண்டு நாட்கள் கழித்துக் கொஞ்சம் அழ வேண்டி வரும் என்பதை அப்போது நான் உணரவில்லை.

(அடுத்த வாரம் தொடரும்)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்