உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவை நடத்தும் விதத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் அதிலிருந்து விலகப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
”அவர்கள் மாறவில்லை என்றால் நான் உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறுவேன்” என ப்ளூபெர்க் நியூஸ் ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும், நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை தீர்க்கவும் உலக வர்த்தக அமைப்பு நிறுவப்பட்டது.
உள்ளூர் தொழில் அமைப்புகளை வெளிநாட்டு சந்தையிடமிருந்து பாதுகாக்க பல வரிகளை விதித்து வரும் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பால் அமெரிக்கா நியாமாக நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அச்சுறுத்தல் அவரின் வர்த்தக கொள்கைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் வெளிப்படையான வர்த்தக முறைக்கும் உள்ள முரண்பாட்டை கோடிட்டு காட்டுகிறது.
உலக வர்த்தக நிறுவனத்தில் சச்சரவுகளுக்கு நீதி வழங்க புதிய நீதிபதிகளை நியமிப்பதை அமெரிக்கா சமீப காலமாக தடுத்து வருகிறது. எனவே தீர்ப்புகள் வழங்குவதில் தடைகள் ஏற்படுகின்றன.
உலக வர்த்தக அமைப்பு அமெரிக்காவின் இறையாண்மையில் தலையிடுவதாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியான ராபர்ட் லிதிசைர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டிரம்பின் குற்றச்சாட்டுகள் என்ன?
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னில் இருந்து உலக வர்த்தக நிறுவனம் நியாயமற்றதாக நடந்து கொள்வதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“உலக வர்த்தக நிறுவனம், அனைவருக்கும் பயன் அளிக்கிறது ஆனால் அமெரிக்காவுக்கு இல்லை நாங்கள் பெரும்பாலான வழக்குகளில் தோற்றுப் போயுள்ளோம்” என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி பேட்டியில் கடந்த வருடம் தெரிவித்தார்.
சமீப காலங்களில் பழிவாங்கும் விதத்தில் பல வர்த்தக போர்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது சீனாவுடனான வர்த்தக சண்டை.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்தார்.
அடுத்த வாரத்தில் மூன்றாம் கட்டமாக சீன பொருட்களுக்கு 200பில்லியன் டாலர்கள் வரை வரி விதிப்பது குறித்து அறிவிக்கப்படும் என ப்ளூம்பெர்க் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து நேர்காணலில் கேட்டபோது அது முற்றிலும் தவறு என்று சொல்ல முடியாது என டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு அதே மதிப்பில் சீனா வரி விதித்தது. மேலும் உலக வர்த்தக் அமைப்பில் புகாரும் தெரிவித்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை அமெரிக்கா மீறுவதாக தெளிவாக தெரிகிறது என சீனாவின் வணிகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிற ஒப்பந்தங்கள் குறித்தான டிரம்பின் அச்சுறுத்தல்கள் என்ன?
news 2.003
திங்களன்று அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ, வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) சீரமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், அது ஒரு நல்ல ஒப்பந்தம் என்றும் இரண்டு நாடுகளுக்கும் சிறப்பான ஒன்று என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
1994ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த ஒப்பந்தம் தொடர்பான மறுபேச்சுவார்த்தைக்கு பலமுறைகள் வலியுறுத்திய டிரம்ப், அமெரிக்காவில் உற்பத்தி ரீதியிலான பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1 ட்ரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருடாந்திர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா, இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது. இறுதியாக இந்த ஒப்பந்தம் கனடாவின் சம்மதம் மற்றும் கையெழுத்துடன் முழுமை பெறும்.

courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here