ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையை பாதுகாத்திடவும் மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்குமான உரிமைகள் கிடைத்திட வழிசெய்யும் பொருட்டு 1948 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மனித உரிமைகள் நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், ‘சாதி, மதம், இனம், நிறம், பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையிலான எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மனித உரிமைத் தத்துவமாகும்.

1948-ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகளின் பொது அவை ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நம்மிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறோமோ, அதுபோல நாம் மற்றவர்களிடமும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே மனித உரிமையின் அடிப்படைத் தத்துவமாகும்.

அவ்வகையில் ‘All Human, All Equal’ என்பதை இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் நாள் முழக்கமாக ஐ.நா., அவை அறிவித்துள்ளது. இதைத்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குகு முன்பே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் “யாவரும் கேளிர்” என்றும் தமிழ் நிலம் தாங்கி நின்றது.

இதைத்தான் ‘சுயமரியாதை’ எனும் பெயரில் இந்தத் தமிழ் மண் அரசியல்-சமூக – பண்பாட்டுத் தளத்தில் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டிடவும், ஒவ்வொருவரின் சுயமரியாதையையும் பாதுகாத்திடவும் இந்த மனித உரிமைகள் நாளில் உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here