இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  உலகின் 5 ஆம் நிலை வீராங்கனையான சிந்து இப்போட்டியில் தனது 5ஆவது பதக்கத்தையும் உறுதி செய்தார்.

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டம்  நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் உலகின் 2 ஆம் நிலை வீராங்கனை சீன தைபேயின் டை ஸ யிங்குடன் மோதினார்.
முதல் கேமை 12-21 என்ற புள்ளிக் கணக்கில் டைசூ எளிதாக கைப்பற்றினார், ஆனால், தனது சிறந்த ஆட்டத்தால், அடுத்த  இரண்டு  கேம்களை 23-21, 21-19 என போராடி வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார் சிந்து.

இதன் மூலம் உலக சாம்பியன் போட்டியில் தனது 5ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் 24 வயதான சிந்து. ஏற்கெனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இன்று(சனிக்கிழமை)  நடைபெறும் அரையிறுதியில் சீனாவின் சென் யுபெய்-டென்மார்க்கின் மியா லிச்பெல்ட் மோதுகின்றனர்.இப்போட்டியில் வெற்றி பெறும் வீரருடன் சிந்து மோதுவார். உலக சாம்பியன் போட்டியில் 5 பதக்கங்களை வென்றதின் மூலம் ஸாங் நிங்கின் சாதனையை சமன் செய்தார் சிந்து.

மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் 21-15, 25-27, 12-21 என்ற கணக்கில் டென்மார்க்கின் மியாவிடம் 1 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.

போட்டியின் முடிவில் பேசிய சாய்னா, தனது காலிறுதி ஆட்டத்தில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என கண்டனம் தெரிவித்தார்.  ஒரு கட்டத்தில் சாய்னாவுக்கு கிடைக்க வேண்டிய 2 புள்ளிகளை நடுவர் ரத்து செய்தார் என்பதுஇங்கு குறிப்பிடத்தக்கது. சாய்னா ஆடிய மைதானத்தில் நேரடி ஒளிபரப்பு இல்லாததால், முறையீடு செய்யவும் வாய்ப்பு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here