12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், டவுன்டானில் நேற்று(திங்கள்கிழமை) நடந்த 23வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, வங்கதேசத்துடன் மோதியது. ‘டாஸ்’ வென்று வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

3வது ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் பவுண்டரியை அடித்தது. 13 பந்துகளை சந்தித்த  ’யுனிவர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் 4-வது ஓவரில் முகமது சைபுதீன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப், இவின் லீவிஸ்சுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.  அணியின் ஸ்கோர் 24.3 ஓவர்களில் 122 ரன்னை எட்டிய போது இவின் லீவிஸ் 70 ரன்களில் (67 பந்துகள்,6 பவுண்டரி, 2 சிக்சருடன்) வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் அதிரடியாக ஆடி மொசாடெக் ஹூசைன் வீசிய ஒரு ஓவரில் அதிக தூரத்திற்கு ஒரு சிக்சர் விளாசினார். அது 104 மீட்டர் தூரம் சென்றது. ஹெட்மயர் 50 ரன்களில்(26 பந்துகளில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) முஸ்தாபிஜூர் ரகுமான் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஸ்செல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஜாசன் ஹோல்டர் வேகமாக மட்டையை சுழற்றினார். அதிரடியாக ஆடிய ஜாசன் ஹோல்டர் 33 ரன்களில் (15 பந்துகள், 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் 96 ரன்கள் (121 பந்துகள், 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேற்றப்பட்டார்.

இறுதியில் 50 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் முகமது சைபுதீன், முஸ்தாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தமிம் இக்பால், சவுமியா சர்கார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சை அதிரடியாகவே அடித்து ஆடினார்கள்.

8.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 52 ரன்னாக இருந்த போது சவுமியா சர்கார் 29 ரன்கள்(23 பந்துகள், 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்திருந்தபோது வெளியேற்றப்பட்டார்.

அடுத்து தமிம் இக்பால் 48 ரன்களில் (53 பந்துகள், 6 பவுண்டரி) அவரும் அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் அதிரடியாக ஆடிய ஷகிப் அல்-ஹசன் 83 பந்துகளில் (ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9வது சதம் இதுவாகும்) சதம் அடித்து அசத்தினார்.

41.3 ஓவர்களில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷகிப் அல்-ஹசன் 124 ரன்கள்(99 பந்துகள், 16 பவுண்டரி) லிட்டான் தாஸ் 69 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 94 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

உலக கோப்பை போட்டியில் வங்கதேச அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். அத்துடன் உலக கோப்பை கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச சேசிங் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here