மக்களவையில் பிரதமர் மோடி பேசியது இந்தி திரைப்படம் போல இருந்தது, அவர் உலகின் மிகச்சிறந்த நடிகர் என தெலுங்குதேச எம்.பி சீனிவாஸ் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி ஸ்ரீநிவாஸ் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல காங்கிரஸ் சார்பிலும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்களவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் பேசியதை தொடர்ந்து இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். சுமார் 90 நிமிடங்கள் அவர் உரையாற்றினார்.

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்த நிலையில் தீர்மானம் தோல்வி அடைந்தது.

முன்னதாக பிரதமர் மோடி உரையாற்றியதை தொடர்ந்து மக்களவையில் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தெலுங்குதேச எம்.பி ஸ்ரீநிவாஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மக்களவையில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் மிகச் சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஒன்றரை மணிநேர உரை ஏதோ இந்தி திரைப்படம் போல இருந்தது. மிகச்சிறந்த நடிப்பு, அவர் உலகின் மிகச் சிறந்த நடிகர்’’ எனக் கூறினார்.

ஸ்ரீநிவாஸின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் சுமித்திர மகாஜனும் அவரை கண்டித்தார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்