குஜராத்தில் உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். நர்மதா அருகே கெவாடியா கிராமத்தில் சர்தார் சரோவர் அணை பகுதியில் கட்டப்பட்ட சிலைலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். வல்லபாய் படேலின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

550 மன்னராட்சி சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் வல்லபாய் படேல். ஒற்றுமைக்கான சிலையாக கருதப்படும் வல்லபாய் படேல் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட (93 மீட்டர்) இரு மட ங்கு உயரமாக சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் கரையோரத்தில் சர்தார் சரோவர் அணை அருகில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை நாட்டுக்கு அர்பணித்து, அதன் அருகே, வால் ஆஃப் யூனிட்டி (ஒற்றுமையின் சுவர்)-யை திறந்து வைத்தார்.

சிலை திறப்பின்போது இந்திய விமானப் படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (அக்டோபர் 31) படேலின் பிறந்த தினமாகும். இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, விமானங்கள் மூலம் வானில் இருந்து சிலை மீது மலர்களைத் தூவின. தொடர்ந்து பல்வேறு கலாசார, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளும், குஜராத் போலீஸார், ராணுவம், துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது.

படேல் சிலைக்கான கட்டுமானப் பணி கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த சிலையின் கட்டுமானப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டது. 33 மாதங்களில் அந்த சிலை கட்டுமான பணியை அந்த நிறுவனம் முடித்துள்ளது. இதன் மூலம் உலகில் மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்ட பிரமாண்ட சிலை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இந்த சிலை கட்டுமானத்துக்கு, 70,000 டன் சிமென்ட், 18,500 டன் இரும்பு கம்பிகள், 6,500 டன் இரும்பு கட்டுமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, 1,700 டன் வெண்கலம், 1,850 டன் வெண்கலப் பூச்சு ஆகியவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.2,989 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சின்னம் என்று சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள ஸ்பிரிங் டெம்பிள் புத்தர் சிலை 153 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலை கட்டுவதற்கு 11 ஆண்டுகள் பிடித்தது. இந்த சிலையே உலகில் மிக உயரமான சிலையாக இதுவரை கருதப்பட்டு வந்தது. தற்போது உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமை, சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு கிடைத்துள்ளது.

சர்தார் வல்லபபாய் படேலின் சிலையில் 5 உள்பகுதிகள் உள்ளன. அதில் தரையில் இருந்து முழங்கால் வரையிலும் முதல் பகுதி ஆகும். 2ஆவது பகுதி, சிலையின் தொடை பகுதியாகும். 3ஆவது பகுதி, பார்வையாளர்கள் பகுதியாகும். 4ஆவது பகுதி, பராமரிப்பு இடமாகும். 5ஆவது பகுதி, சிலையின் தலை மற்றும் தோள் பகுதியாகும். பார்வையாளர்கள் இடத்தில், ஒரே நேரத்தில் 200 பேர் வரை இருக்கலாம். அங்கிருந்து சாத்புரா, விந்திய மலைப்பகுதிகளை கண்டு ரசிக்க முடியும். சர்தார் சரோவர் நீர்த்தேக்கம், கருடாஸ்வேர் நீர்த்தேக்கம் ஆகியவற்றையும் பார்வையிடலாம்.

குஜராத் முதல்வராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்தபோது, சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைப்பது தொடர்பான பிரசாரத்தை கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, சிலைக்கு தேவையான இரும்பு, பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது. மக்கள் சுமார் 135 மெட்ரிக் டன் இரும்பை அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here