உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் கண் பார்வை தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய மருத்துவ வசதிகள் இன்மை ஆகியவையே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

220 கோடி பேர் பகுதியளவு அல்லது முழுமையாக பார்வைத் திறன் இல்லாமல் இருப்பதாகவும் இதில் 100 கோடி பேருக்கான பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் கண் பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணம் என ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.மேலும் வெளிப்புற நடமாட்டம் இல்லாமல் வீடு அல்லது மூடிய அறைக்குள் இருப்பதும் கண் குறைபாடுக்கு காரணமாக அமைவதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஸ்டூவர்ட் கீல் என்ற மருத்துவர் கூறியுள்ளார்.