உரிமம் பெறாமல் விடுதி, காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு விடுதிகள் நடத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டிடங்களில் மட்டுமே விடுதி அல்லது காப்பகத்தினை, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க வேண்டும்.

இருபால் தங்குமிடமாக இருப்பின் ஆண், பெண் ஆகியோருக்கு தனித்தனி கட்டிடம் அமைக்க வேண்டும். தவிர்க்க இயலாத நிலையில் தனித்தனி அறைகளில் தங்கவைக்க வேண்டும். பெண்கள் விடுதியாக இருப்பின் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 50 குழந்தைகளுக்கு ஒரு விடுதிக் காப்பாளரும், 24 மணி நேரமும் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட வேண்டும். 

ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருப்பின் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். 50-க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா, டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்த வேண்டும். விடுதிக்காப்பாளர் அல்லது துணை விடுதி காப்பாளர் எந்த ஒரு நேரத்திலும் விடுதியில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


விடுதியில் உள்ள பாதுகாவலர்கள் அவசர காரணம் ஏதுமின்றி விடுதிக் கட்டடங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள.

எனவே விடுதிகளை நடத்துபவர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான அத்தாட்சியினைப் பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களைப் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்து கொள்ள வரும் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாமல் இயங்கும் விடுதிகள், பிற விடுதிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் 9444841072 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்சப் மூலம் புகைப்படங்களுடன் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here