தமிழ்நாட்டில் பால் விற்பனையில் அரசின் ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாகவும் அதே நேரத்தில் தரமாகவும் இருப்பதால் பொதுமக்கள் இடையே ஆவின் பால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ஆவின் பால் விலை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம்   ஆண்டு லிட்டருக்கு ரூ.10 உயர்த்தினார். அதன் பின்னர் 5 வருடமாக பால் விலை உயர்த்தப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் “பால் உற்பத்திக்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. கால்நடை தீவனம் விலை அதிகரித்துள்ளதால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக “வைக்கோல்” விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2014ல் 25 கிலோ வைக்கோலின் விலை ரூ.120 ஆக இருந்தது. அவற்றின் தற்போதைய விலை ரூ.250 ஆக அதிகரித்து இருப்பதாக தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.40 ஆயிரத்திற்கு குறைவாக பசு மாடு கிடைப்பதில்லை எனவும் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செலவு கடந்த 5 வருடத்தில் 63 சதவீதம் உயர்ந்து இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே இத்தொழில் செய்யும் விவசாயிகள் பிழைப்பு நடத்த முடியும். இல்லையெனில் இத்தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார். அதனால் உடனடியாக ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து முதலமைச்சர், பால் கொள்முதல் கூட்டுறவு சங்க அதிகாரி அழைத்து விலையை உயர்த்தவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் எந்த அளவிற்கு உயர்த்துவது என்பது குறித்து துறையின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேலூர் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் ஆவின் பால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

பால் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ27-ல் இருந்து ரூ.42 ஆக 15 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.29-ல் இருந்து ரூ.50 ஆக 21 ரூபாய் உயர்த்தவும் வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்து பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக முதல்- அமைச்சர் கூறியுள்ளார். பால் விலை உயர்வு வேலூர் இடைத்தேர்தலுக்கு பிறகு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

இதனால் ஆவின் பால் விலை உயர்வு ரூ.10 முதல் ரூ.15 வரை இருக்க வாய்ப்பு உள்ளது. வேலூர் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பததால் தேர்தல் முடிந்த பின்னர் விலை உயர்வு அறிவிக்கப்படும்.

கொள்முதல் விலையை உயர்த்தும் போது விற்பனை விலையை உயர்த்துவது வழக்கம். கடுமையான நிதி நெருக்கடியில் ஆவின் சென்று கொண்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)