உயர்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது புதிய கல்விக் கொள்கை; மாணவர்களுக்கான வரப்பிரசாதம் – ஐ.ஐ.டி. இயக்குநர்

0
135

புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், பாதுகாப்பு வழிமுறைகளுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 872 பேருக்கு நேரிலும், 1,36,873 பேருக்கு அந்தந்த கல்லூரிகள், தபால் மூலம் என்று மொத்தம் 1,37,745 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 3 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டமும், 683 பேருக்கு முனைவர் பட்டங்களும், 7 பேருக்கு சிறந்த ஆய்வேட்டுக்கான விருதும், 86 பேருக்கு தனிச்சிறப்புடன் முதல் நிலை தகுதிச் சான்றிதழும், 93 பேருக்கு பரிசு மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் பேசிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, மூன்றாம் பாலினத்துக்கு இடம் வழங்கியது, 7 புதிய கல்லூரிகள் மற்றும் 46 புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியது, பெரிய புராணம், சைவ சிந்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ், ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்தது, 1990-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருந்து தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை வழங்கியது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என்று சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சிறப்பு விருந்தினரும், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநருமான பாஸ்கர் ராமமூர்த்தி, உயர்கல்வியில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கை, மாணவர்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here