உப்பாகக் கரையுது ஆயுள்

0
81

(ஜூன் 10, 2016இல் வெளியான செய்தி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)

தமிழகத்தில் பருவநிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் இப்போது அதிகமாக அனுபவித்து வருகிறோம். இதில் இயற்கை நமக்களித்த கொடை மழை, வெயில், குளிர் எனக் குறிப்பிட்ட காலத்தைக் கடந்தும் சில காலங்களில் குறைந்தும், மாறியும் வருவதை உணர முடிகிறது. கோடைக் காலத்திலும் மழைக்காலத்திற்கு முன்பும் மழை பெய்துவிட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி என்னும் ஊடகச் செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். மழை ஒருபக்கம் விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்தாலும், பருவம் மாறிப் பெய்யும் மழை ஒரு பிரிவினருக்கு வேதனையையே அளிக்கிறது.

யார் அந்த ஒரு பிரிவினர்? நமது உணவுத்தேவையில் அத்தியாவசியமானதான உப்பை உற்பத்தி செய்யும் தொழிலாளிகள்தான் அவர்கள். தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமானோர் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நெய்தல் நிலப்பரப்பில்தான் உப்பளங்கள் அமைக்க முடியும். அதிலும் சதுப்பு நிலப்பரப்பில்தான் இயற்கையாக உப்பளங்கள் அமையும். அப்படி அமைந்ததுதான் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அமைந்துள்ள உப்பளம். கடல் சார்ந்த பகுதிகளில் உப்பளங்கள் அமைந்திருந்தாலும் அங்கு பணியாற்றுகிறவர்கள் மீனவர்களாக இருப்பதில்லை. கடல் பகுதி சார்ந்த விவசாயிகளே இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்காணம் பகுதியில் மட்டும் சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது உப்பளம்.

மரக்காணத்தைச் சுற்றியுள்ள கரிப்பாளையம், முட்டுக்காடு, தாழங்காடு, ஊரணி, ஆலப்பாக்கம், கந்தாடு, சாணிமேடு, அகரம், மரக்காணம் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உப்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் நடைபெறும். அதன் பிறகு ஆறு மாதங்கள் மழைக்காலத்தில் உப்பு உற்பத்தி நடைபெறாது. உற்பத்தி காலத்தில் 45 நாட்களுக்கு இந்தப் பகுதியில் சுமார் 5000 தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் படிப்படியாக குறைந்து 2000 பேர் இந்தப் பணியில் ஈடுபடுவார்கள். இப்படி இங்கு வேலை செய்யும் நபர்களில் ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாயும் பெண்களுக்கு 100 ரூபாயும் கூலி வழங்கி வருகின்றனர் உற்பத்தியாளர்கள். சுமார் 200 தனியார் உப்பு உற்பத்தியாளர்களும் ஒரு அரசு கூட்டுறவு உப்பு உற்பத்தி நிறுவனமும் இந்தப் பகுதியில் இயங்கி வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு இந்தப் பகுதியில் மட்டும் சுமார் ஐந்து டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்படி உற்பத்தி செய்யும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றால், அளவிற்கு அதிகமான உப்பு கரிப்பதைப் போலவேதான் இருக்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட உப்பு ஒரு மூட்டை சுமார் 120 கிலோ வெறும் 100 ரூபாய்க்குத்தான் வாங்கப்படுகிறது. இங்கு குறைந்த காலத்திலே வேலைகிடைப்பதால் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று முதல் ஐந்து நபர்கள்வரை வேலை செய்கிறார்கள். இதனால் அங்கு வசிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத நிலையே நீடிக்கிறது. அதனால் இந்த பகுதியில் கல்வித்தரம் குறைவாகவே உள்ளது. வேறெந்த வேலையும் தெரியாத இந்த மக்கள் முழுக்க முழுக்க உப்பளத்தையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இவர்களின் சேமிப்பு அடுத்த ஆறுமாத காலத் தேவைகளுக்கே சரியாக இருப்பதால் நீண்டகால சேமிப்பு என்பது முற்றிலும் இல்லாமலே உள்ளது. 50 வயது வரைதான் இங்கு இந்தத் தொழிலில் ஈடுபட முடியும். மேலும் உடலில் எங்காவது காயம் ஏற்பட்டாலும் சரியாகும்வரை வேலைக்குச் செல்ல முடியாது. இவ்வளவு சிரமத்திற்கிடையில்தான் மரக்காணம் பகுதி மக்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.
இந்த நிலையை மாற்ற அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் அவை நிறைவேற்றப்படாமலே உள்ளது என்கின்றனர்.

அப்படி என்ன கோரிக்கைகள் வைத்தார்கள்?.

1.வாழ்க்கையின் விளிம்பு நிலையிலுள்ள இந்த மக்கள் நிரந்தரமாக வசிக்க ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வீடு.
2.குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உயர்கல்வி பயில இதே பகுதியில் தொழிற்கல்வி நிலையம், கல்லூரி போன்றவற்றை நிறுவ வேண்டும்.
3.ஆறு மாத காலம் வேலையில்லாத நாட்களில் மாதம் 3000 உதவித்தொகை.
4.மேலும் கூலியை முறைப்படுத்தி கூட்டுறவு உப்பு உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும்.

கண்டுகொள்ளுமா அரசுகள்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்