உத்தரப் பிரதேச மாநிலத்தின் இரண்டு மக்களைவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கோராக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தும், புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ்பிரசாத் மவுரியாவும் அம்மாநிலத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனையடுத்து காலியான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.11) இடைதேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை (இன்று) நடைபெற்று வருகிறது.

மதியம் இரண்டு மணி நிலவரப்படி, கோராக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவின் குமார் நிஷாத் 2,12,061 வாக்குகளுடனும், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப்சிங் படேல் 1,67,008 வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர். இரு தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளர்கள் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

அதேபோன்று பீகாரின் அராரியா மக்களவைத் தொகுதியில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் 3,33,050 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜகவைவிட 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்