ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில், அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, போலீசார் உட்பட எட்டு பேரால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டம், ரசானா பகுதியைச் சேர்ந்த முஹமது யூசூஃப் என்பவரின் மகள் அசிஃபா என்ற எட்டு வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த முஹமது யூசூஃப், அசிஃபாவை பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கிவில்லை.

இதனையடுத்து அவர், ஹிராநகர் காவல்நிலையத்தில், ஜன.12ஆம் தேதி புகார் அளித்தார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து காணாமல்போன அசிஃபாவைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி, ரசானா அருகேயுள்ள வனப்பகுதியில் அசிஃபா சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையில், அசிஃபா கடத்தப்பட்டு, ஒரு கோவிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், இந்த கொடூர குற்றம் வெளியே தெரியாமலிருக்க, அசிஃபாவின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும், ஆதாரங்களையும் போலீசாரே அழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தச் சம்பவத்தில் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, நான்கு காவலர்கள், 17 வயது நிரம்பிய ஒரு சிறுவன் உள்ளிட்ட எட்டு பேர் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. சிறுமி அசிஃபாவுக்கு நிகழ்ந்த கொடுமை, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தக் கொடுமையைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதனிடையே குற்றவாளிகளுக்கு ஆதராவாக நடந்த பேரணியில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, சிறுமி அசிஃபா வழக்கில் நீதி கிடைக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மன்னித்துவிடு ஆசிஃபா இந்த நாடு உனக்கான பாதுகாப்பைத் தரவில்லை என பதிவிட்டுள்ளார். மேலும், ஒரு தந்தையாக, நாட்டின் குடிமகனாக, ஒரு மனிதனாக அசிஃபாவைப் பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்